தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (பிஎல்ஐ), கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (ஆர்பி எல்ஐ) பாலிசிகளின் முதிர்வு தொகைக்கு 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க தபால்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலிசிதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆயுள் காப்பீடு திட்டம் மற்ற காப்பீடு திட்டங்களை விட குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டை வழங்குகிறது. மேலும், முதிர்வு தொகையை நிர்ணயிக்கும் போனஸ் விகிதம், மற்ற எல்லா ஆயுள் காப்பீடு திட்டங்களை விட மிக அதிகமாக வழங்கப்படுகிறது.
இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரும்போது டிடிஎஸ் தொகை தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்கப்படாத நிலையில், தற்போது, தபால் துறை இயக்குனரகம் பிஎல்ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ பாலிசிகளின் முதிர்வு தொகையானது ஒரு லட்சத்தை தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தபால் துறை வெளியிட்ட உத்தரவால் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்ட திட்டத்தின் காப்பீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள பீல்டு ஆயுள் ஆபீசர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் பாலிசிதாரர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். எனவே, புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலிசிதாரர்கள் மற்றும் பீல்டு ஆபிசர்கள் கூறியதாவது: முதிர்வு தொகை ஒரு லட்சம் தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என்ற உத்தரவால் பல பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். காப்பீடு திட்டத்தில் இணையும்போது இதுபோன்ற எவ்வித தகவல்களும் அளிக்காத நிலையில், திடீரென டிடிஎஸ் கழிக்கப்படும் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, காப்பீட்டில் இணையும்போது ஜிஎஸ்டி பிடிக்கப்படும் என தெரிவிக்காத நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு 4.5 சதவீதம் ஜிஎஸ்டியும், ஒரு வருடத்திற்கு பிறகு 2.3 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்கப்படும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.மேலும், தபால்துறையின் திடீர் உத்தரவால் பாலிசிதாரர்கள் பலர் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, தபால்துறை இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment