மூன்றாவது பிரசவத்திற்கு பேறு கால விடுப்பு அளிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 3வது பிரசவத்துக்காக பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால், முதல் 2 குழந்தைகளின் பிரசவத்துக்கு மட்டும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும் எனக்கூறி, 3வது பிரசவத்துக்கு விடுப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஆசிரியை தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன் திருணமாகி, 2 குழந்தைகளை பெற்ற நிலையில் கணவர் இறந்து விட்டதால், மறுமணம் செய்தார் என்றும், அதன் பின் கருவுற்ற அவருக்கு கடந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் பேறுகால விடுப்பு கேட்டு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு எனவும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், தமிழக அரசின் அரசாணைப்படி, 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுமுறை வழங்கப்படும் என்பதால், 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், இரு குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்ற அரசு கொள்கை முடிவை மீறி, 3 வது பிரசவத்துக்கு விடுப்பு கோர முடியாது என்றும், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையும் 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரிய வழக்கையும் நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment