ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் பற்றாக்குறை, கழிவறை பற்றாக்குறை என பல அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றிய பின்னரே மணற்கேணி போன்ற செயலிகள் மாணவர்களுக்குப் பயனளிக்கும்.
இதற்கு பலத்த வரவேற்பு இருக்கும் அதே சமயம், கடந்த பத்தாண்டுகளாக அரசுப் பள்ளிகளில் நிரந்த பணியில் அசிரியர்கள் நியமிக்கப்படாமல் பற்றாக்குறை நிலவி வருவதை ஆசிரியர் உமா மகேஸ்வரி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை உமா மகேஸ்வரி, தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கல்வி குறித்தும், அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். சமீபத்தில் அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி பற்றிப் பேசும்போது, அதனால் அரசுப் பள்ளி மாணவர்களைவிட தனியார் பள்ளி மாணவர்களுக்கே அதிகப் பயன் என்றார். இதுபற்றி அவரிடம் விரிவாகப் பேசினேன்.
“அரசுப் பள்ளிகளில் பத்து ஆண்டுகளாக நிரந்தர பணியில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தொடர்ச்சியாகத் தற்காலிக ஆசிரியர்களை மட்டுமே அரசு பணியில் சேர்த்து வருகிறது. பொதுவாக ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியரைவிட, அரசு பள்ளி ஆசிரியர்களின் பணி அதிகமானது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்குக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால், பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவைப்பதே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.
இன்று நகரங்களைத் தாண்டி இன்னும் பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஐந்து பாடத்திற்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் என்ற நிலைதான் இருக்கிறது. 30 பேர் இருக்க வேண்டிய வகுப்பில் 80 மாணவர்கள் இருக்கிறார்கள்.
சில பள்ளிகளில், ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இப்படி அடிப்படையாகப் பல பிரச்னைகளை வைத்துக்கொண்டு, மணற்கேணி செயலி மூலம் இதை எல்லாம் மாற்ற நினைப்பது சரியல்ல. மணற்கேணி செயலியில் பல நன்மைகள் இருந்தாலுமே, அதன் பயன்கள் எல்லாம் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், வசதி படைத்த மாணவர்களுக்கும் மட்டுமே போய் சேரும்.
`எண்ணும் எழுத்தும் திட்டம்' மூலம் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. அதில், ஒன்பதாவது படிக்கும் மாணவர்களுக்குக் கூட கூட்டல், கழித்தல் தெரியாததைக் கண்டுபிடித்துள்ளோம். பல மாணவர்களுக்குத் தமிழிலும், ஆங்கிலத்திலும் மூவெழுத்து சொற்களைக் கூட படிக்கத் தெரியவில்லை. இந்த கற்றல் இடைவெளிகளை ஆசிரியர்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். அதற்குத் தகுந்த ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமிக்க வேண்டும்.
அடிமட்டத்தில் உள்ள, முதல் தலைமுறை மாணவர்கள், முழுக்க முழுக்க ஆசிரியர்களை நம்பியே இருக்கிறார்கள். இப்படி ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் பற்றாக்குறை, கழிவறை பற்றாக்குறை என பல அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றிய பின்னரே மணற்கேணி போன்ற செயலிகள் மாணவர்களுக்குப் பயனளிக்கும்.
யுனஸ்கோ, தன் சமீபத்திய அறிக்கையில், பள்ளிக் குழந்தைகள் படிப்பிற்காக ஸ்மார்ட்போனை நம்பி இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என உலக நாடுகளுக்கு அறிவித்தது. குழந்தைகளிடையே கவனச் சிதறலைத் தடுக்கவும், கற்றலை மேம்படுத்தவும், இணையவழி அபாயங்களில் இருந்து தடுக்கவும் இந்த ஸ்மார்ட்போன் தடையை யுனஸ்கோ வலியுறுத்தி வருகிறது.
ஏற்கெனவே கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்புகளின் போது, குழந்தைகள் சந்தித்த பிரச்னைகளை நாம் பார்த்தோம். சரியான கவனிப்பும், மேற்பார்வையும் இல்லாத போது குழந்தைகள் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்” என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.
யுனஸ்கோ தனது அறிக்கையில், `கல்வித்துறையில் தொழிநுட்பம் எப்போதுமே மனிதர்களுக்கு அடுத்தப்படியாகத்தான் இருக்க வேண்டும். மாணவர்- ஆசிரியரின் நேருக்கு நேர் கற்றலுக்கு இணையாக எந்தத் தொழில்நுட்பமும் இருக்க முடியாது. டிஜிட்டல் கல்வி மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் சமமான கல்வியை எல்லோருக்கும் வழங்குவதில்லை. மேலும், செல்போன்கள் மூலம் மாணவர்களின் தரவுகள், தனிப்பட்ட தகவல்களைப் பறிகொடுக்கும் ஆபத்தும் இருக்கிறது.
டிஜிட்டல் கல்வியை ஆதரித்து வெளியாகும் பல ஆய்வுகளை தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக வெளியிடுபவை' என்றும் யுனஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment