தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி லத்தேரி சிவன்கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் நந்தகுமார். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 14 வயதுடைய நிவேதினி என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள லத்தேரி குடியாத்தம் சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர் இன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் தீடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவசர ஊர்தியின் மூலமாக மாணவியை அங்குள்ள கே.வி.குப்பம் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
கே.வி.குப்பம் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர், வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் வரும் தகவலை வைத்து காவல் துறையினர் விசாரணையை துவக்கவுள்ளனர். இது தொடராக பிற விசாரணையையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.