தேர்தல் வேலையை முடித்துவிட்டு, பைக்கில் கணவனுடன் சென்று கொண்டிருந்தார் டீச்சர் முத்துகமலி.. எதிர்பாராமல் கீழே விழுந்தவர் இப்படி அநியாயமாக உயிரிழந்துவிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
செங்கத்தை அடுத்துள்ளது மேல்புழுதியூர் அரசு நடுநிலைப்பள்ளி.. இங்கு டீச்சராக வேலை பார்த்து வந்தவர் முத்துகமலி.. 30 வயதாகிறது.. நெல்லையை சேர்ந்தவர்.
இவர் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு தேர்தல் பணிக்காக சென்றிருந்தார். தேர்தல் பணியை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கணவர் விஜயகுமாருடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வளையாம்பட்டு அடுத்த குமாரசாமிபாளையத்தில் இவர்களது வீடு உள்ளது.
வளையாம்பட்டு ரோட்டில் பைக்கில் சென்றபோது, திடீரென அங்கிருந்த வளைவில் திரும்பி உள்ளனர்.. அப்போது திடீரென தடுமாறி 2 பேருமே கீழே விழுந்துவிட்டனர்.. இதில் முத்துகமலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனால், உடனடியாக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.. பின்னர் அங்கிருந்து புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இத்தனை ஆஸ்பத்திரிகளில் தீவிரமாக சிகிச்சை அளித்தும், பலனின்றி டீச்சர் முத்துகமலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேசாக தலையில் அடிபட்டுள்ளது என்றுதான் ஆரம்பத்தில் குடும்பத்தினர் நினைத்தனர்.. ஆனால், அநியாயமாக உயிரிழந்த டீச்சரின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துவிட்டது. டீச்சருக்கு ஒன்றவரை வயதில் பெண் குழந்தை உள்ளதாம்..இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.