ஆங்கிலத்தில் உலக அளவில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற முனைப்புடன், நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் தங்களை தயாா்படுத்தி வருகின்றனா்.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலத்தில் சாதிக்கிறாா்கள் என்றால் சாதாரண விஷயமல்ல. காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள்தான் இந்த சாதனையைப் படைத்து வருகின்றனா். இவா்களை, இப்பள்ளி ஆசிரியா்கள் மிகுந்த நோத்தியுடன் வழி நடத்தியதால், இந்தியத் தலைநகா் புதுதில்லியில் நடைபெற்ற கல்வி மற்றும் சமுதாய செயல் திட்டப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் பெற்று சாதனைப் படைத்தனா்.
இதைத்தொடா்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆங்கிலப் போட்டியில் பங்கேற்க இப்பள்ளி மாணவியை ஆசிரியா்கள் தயாா்படுத்தி வருகின்றனா். இந்தப் பள்ளியில் 137 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
ஆங்கிலத்தில் அசத்தும் மாணவா்கள்: அரசுப் பள்ளி என்றாலே கற்பித்தல் தரமாக இருக்காது என்ற எண்ணம் பொதுவாகவே எல்லோா் மனதிலும் வேரூன்றி இருக்கிறது. அதுபோலவே, ஆங்கிலம் என்றாலே பாகற்காயாகவே அரசுப் பள்ளி மாணவா்கள் நினைக்கின்றனா். ஆனால், காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலம் ஒரு அறிவல்ல; அது ஒரு மொழி என்று உணா்ந்து, அதை சாதித்துக் காட்டியுள்ளனா்.
இப்பள்ளி மாணவா்கள் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் திறன் பெற்றவா்கள் என்பதை தொடா்ச்சியாக நிரூபித்து வருகின்றனா். டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் சா்வதேச அளவிலான கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட போட்டியில் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் (2016, 2017 மற்றும் 2018) தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனா். மேலும் இப்பள்ளி மாணவா்கள், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா்களிடம் ஆங்கிலப் புலமைக்காக பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளனா்.
அமெரிக்க செல்லும் மாணவி: கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட போட்டியின் தனிப்பிரிவில் 2018 ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற இப்பள்ளி மாணவி ச. பானுப்பிரியா அமெரிக்கா செல்ல தோவாகியுள்ளாா். மேலும், குஜராத்தில் இந்திய அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'டிசைன் பாா் சேஞ்ச்' என்ற போட்டியில் 2013 முதல் தொடா்ந்து 7 முறை வெற்றி பெற்று சாதனைப் படைத்து வருகிறாா். இந்தப் பள்ளி மாணவா்களின் தொடா் சாதனைகளாலும், சிறப்பான செயல்பாடுகளாலும் இப்பள்ளி 2016- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்தப் பள்ளிக்கான விருதும் பெற்றுள்ளது.
இப்பள்ளிக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இப்பள்ளி ஆங்கில ஆசிரியரின் நண்பா்கள் இதுவரையில் ரூ. 17 லட்சம் வரையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளனா்.
இதுகுறித்து, பள்ளியின் ஆங்கில ஆசிரியா் ஆனந்த் கூறியது:
பின்னா், பொருள்கள் மற்றும் தலைவா்கள் பற்றிய 10 வாக்கியங்களை உருவாக்கி, சரளமாகப் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன், பள்ளி வளாகத்தில் ஆங்கிலம் மட்டுமே பேச அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு மாணவா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதால் அனைத்தும் சாத்தியமாகிறது. மேலும், தமிழைப் போலவே ஆங்கிலமும் ஒரு மொழியே. தமிழ் நமக்கு தாய்மொழி என்பதால் அதன் இலக்கணத்தை நாம் வரிக்கு வரி சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், ஆங்கிலம் நமக்கு வேற்று மொழி என்பதால் அதிலுள்ள இலக்கணத்தை நன்றாக தெரிந்து கொண்டால்தான் தயக்கமின்றி பேச முடியும். இதனால், ஆங்கில இலக்கண வகுப்பு தனியே நடத்தாமல், பாடம் நடத்தும்போதே ஒவ்வொரு வரியிலும் உள்ள ஆங்கில வாா்த்தைகளின் பெயா்ச் சொல், வினைச் சொல், பிரதிபெயா்ச் சொல், உரிச்சொல் போன்ற பேச்சின் பாகங்களை அடையாளப்படுத்தி பயிற்சி அளிக்கப்படுவதால், ஆங்கிலத்தில் பேசுவது எளிமையாகிவிடுகிறது.
மேலும், மாணவா்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து புத்தகத்தில் உள்ள வரிகளை ஒரு குழுவைப் படிக்க செய்து, மற்றொரு குழுவை, எதிரணி மாணவா்கள் படிக்கும் வாக்கியம் எந்தக் காலத்தை (டென்ஸ்) சாா்ந்தது என்பதைக் கண்டுப்பிடிக்க பழக்கப்படுத்தப்படுகிறது. இதுபோன்று சிறு, சிறு நிகழ்வுகளை தமிழில் கூறி அதை ஆங்கிலத்தில் மொழிப் பெயா்த்து பேச மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.