பொங்கல் சர்ச்சை எதிரொலி - பிரதமரின் கலந்துரையாடல் 20-ந் தேதிக்கு மாற்றம் - Asiriyar.Net

Thursday, January 2, 2020

பொங்கல் சர்ச்சை எதிரொலி - பிரதமரின் கலந்துரையாடல் 20-ந் தேதிக்கு மாற்றம்






மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறார். அந்தவரிசையில் இந்த ஆண்டும் வருகிற 16-ந்தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டு இருந்தார்.



இதில் கலந்து கொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தி இருந்தது.

மேலும் இந்த கலந்துரையாடலுக்காக வருகிற 16-ந்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அன்றைய தினம் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இதைப்போல மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகளால் வேறு பல மாநிலங்களிலும் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 16-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது. ஆனால் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Post Top Ad