வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கான படிவத்தில் சில மாற்றங்களை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித்துறை ஆண்டுதோறும் ஏப்ரலில் வருமான வரி தாக்கலில் சில மாற்றங்களை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே 2019-20வது நிதியாண்டுக்கான வருமான வரி படிவத்தில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அவை வருமாறு: ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம், டெபாசிட் வட்டி மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஐடிஆர் -1 சஹஜ் படிவம் தாக்கல் செய்வார்கள். தனிநபர்கள், இந்து கூட்டுக்குடும்பங்கள், ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், தொழில் வருவாய் ஈட்டுபவர்கள் ஐடிஆர்-4 சுகம் படிவம் தாக்கல் செய்வார்கள்.
இவர்களுக்கு தனி படிவம் வெளியிடப்பட உள்ளது.
* சொந்த வீடு:ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பங்குதாரராக கொண்டு சொந்த வீடு வைத்துள்ள தனிநபர்கள், ஐடிஆர் - 1 சஹஜ் மற்றும் ஐடிஆர்-4 சுகம் படிவங்களை பயன்படுத்த முடியாது.
* வெளிநாட்டு பயணம்: நிதியாண்டில் வெளிநாட்டு பயணத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருந்தால், அவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
* மின் கட்டணம்: ஒரு நிதியாண்டில் மின்சார கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால், இவற்றை வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும். மேற்கண்ட முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.