முதல் மதிப்பெண் பெற்றதற்கு பாராட்டு: அரசுப் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான பத்தாம் வகுப்பு மாணவி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 27, 2020

முதல் மதிப்பெண் பெற்றதற்கு பாராட்டு: அரசுப் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான பத்தாம் வகுப்பு மாணவி




ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி மதுமிதா, ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணியை மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர் எடுத்த இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள நெசல் கிராமம் விவசாயம், நெசவுத் தொழிலை பின்னணியாக கொண்ட மிகவும் பின்தங்கிய கிராமம்.

இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 154 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசுப் பொதுத்தேர்வில் 60 முதல் 65 சதவீதம் அளவே தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் 7 ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியாற்றுகின்றனர். தலைமை ஆசிரியராக வெங்கடேசன் பணியாற்றி வருகிறார்.

இந்தப் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு, வழிகாட்டுதல் இல்லாததால் அரசுப் பொதுத் தேர்வுகளில் ஓரளவுக்கு மட்டுமே படித்து தேர்ச்சி பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை அதிகரிக்க தலைமை ஆசிரியர் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டார்.

இதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த இறைவழிபாடு நேர கூட்டத்தின்போது "பள்ளியளவில் அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவர் ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணியை மேற்கொள்ளலாம்" என்று அறிவித்தார். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பள்ளியளவில் மதுமிதா என்ற மாணவி 447 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பள்ளியில் இன்று (ஜன.27) காலை நடந்த இறைவழிபாடு கூட்டத்தின்போது மதுமிதா ஒரு நாள் தலைமை ஆசிரியராக செயல்படுவார் என்று தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து பேசிய மாணவி மதுமிதா, "மாவட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் இந்த கிராமத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் நாம், நல்ல மதிப்பெண் பெற்று இந்த கிராமத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். என்னைப் போல் நீங்களும் நன்றாக படித்து தலைமை ஆசிரியராக இருக்கையில் அமர வேண்டும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவி மதுமிதா, பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டதுடன் வகுப்புகள் முறையாக நடக்கிறதா? என்றும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் ஏதாவது இருந்தால் அதை சுற்றறிக்கையாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினால் அதை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தலைமை ஆசிரியர் வெங்கடேசன் கூறும்போது, "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்தப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தவே இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டேன். இதற்கு ஆசிரியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்"என்றார்.

மாணவி மதுமிதா கூறும்போது, "எனது தந்தை சவுந்தர்ராஜன், தாய் சரிதா இருவரும் நெசவுத் தொழில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் வீட்டில் 3 பெண் பிள்ளைகள். எங்கள் வீட்டில் நான் இரண்டாவது மகள். நான் காலாண்டு தேர்வில் 380 மதிப்பெண் எடுத்தேன். ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணியை பார்க்க கூடுதல் நேரம் படிக்க ஆரம்பித்தேன். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தபோது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நான் இன்னும் அதிகம் படித்து என் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது பள்ளியைப் பொருத்தவரை எந்த குறையும் இல்லை என்றே கூறுவேன்" என்றார்.


நெசல் கிராமத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பெருமையுடன் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Post Top Ad