அடுத்த ஆண்டு 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து? - அமைச்சர் செங்கோட்டையன் பரிசீலிப்பதாக தகவல் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, January 29, 2020

அடுத்த ஆண்டு 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து? - அமைச்சர் செங்கோட்டையன் பரிசீலிப்பதாக தகவல்


தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும்'' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும், அதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தேர்வும் நடத்த வேண்டும் என்றும் இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஒரு சில மாநிலங்கள் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழகத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும்எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்த போது, தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் அவர் கூறியபோது, பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் எந்த மாணவரும் 'பெயில்' ஆக்கப்பட மாட்டார்கள் என்றார்.

இதற்கிடையே, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தமிழக பள்ளிக் கல்வித் துறையும், மத்திய அரசின் ஆணைப்படி, 2019-2020 -ம் கல்வி ஆண்டு முதல் (நடப்பு ஆண்டு) 5 மற்றும் 8-ம்வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாகும், கிராமங்களில் ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவார்கள் என்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எச்சரித்தனர்.

பணிகள் தீவிரம்

பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கின. தேர்வு குழு, தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வு கால அட்டவணை அமைத்தல், தேர்வு முறை, வினாத்தாள் வடிவமைத்தல், வினாத் தாள் மதிப்பீடு போன்ற ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கி.மீ. தொலைவுக்குள் தேர்வு மையம் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அந்தந்த பள்ளியிலேயே 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியது.

இத்தகைய சூழலில், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்துசெய்ய கோரி போராட்டம் நடத்தப் போவதாக பாமக கட்சி தெரிவித்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்வதுகுறித்து அடுத்த ஆண்டு பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.


அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிடுவதாக பாமக.வும் அறிவித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்றஎதிர்பார்ப்பு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad