புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு! - Asiriyar.Net

Tuesday, June 30, 2026

புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!




புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கற்பித்தல் பணியைத் தவிர்த்து அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் இதர அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனடியாகத் திரும்பப் பெற துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், கற்பித்தல் பணியைத் தவிர்த்து பிற அரசுத் துறை அலுவலகங்களிலும், அமைச்சர்களின் தனிச் செயலாளர்களாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


456 பள்ளிகள்... 70 ஆயிரம் மாணவர்கள்:
புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 456 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், விரிவுரையாளர், உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 6,766 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் மொத்தமுள்ள பணியிடங்களின் விபரம்:
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்: 2,457
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்: 2,215
விரிவுரையாளர்கள்: 588
பாலசேவிகா: 245
நடத்துநர்கள்: 233
உடற்கல்வி ஆசிரியர்கள்: 199
தலைமை ஆசிரியர் நிலை-2: 184
ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்: 185
பள்ளி நூலகர்கள்: 122
தலைமை ஆசிரியர் நிலை-1: 73
பாலபவன் பயிற்றுநர்கள்: 51
துணை முதல்வர்கள்: 48
விரிவுரையாளர்கள் (உடற்கல்வி): 45
முதல்வர்கள்: 35
பயிற்றுநர்கள் & பயிற்சியாளர்கள்: 64
மொத்த பணியிடங்கள்: 6,766
கற்பித்தல் பணி பாதிப்பு:
தற்போது பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த மொத்த பணியிடங்களில் 10 முதல் 20 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாகக் கிடக்கின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்களின் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, பள்ளிகளில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் பலர் கல்வித்துறையிலேயே உள்ள எல்.டி.சி. (LDC) மற்றும் யு.டி.சி. (UDC) போன்ற எழுத்தர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிலர் தங்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அயல் பணியாக (Deputation) மக்கள் பிரதிநிதிகளின் தனிச் செயலாளர்களாகவும், அமைச்சர்களின் அலுவலகப் பணிகளிலும் சேர்ந்து சொகுசாகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது.

ஆளுநரின் அதிரடிக்குக் காரணமான 'கோப்பு':
சமீபத்தில் அமைச்சராகப் பதவியேற்ற நமச்சிவாயம், தவளக்குப்பம் அரசு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைத் தனது தனிச் செயலாளராக நியமிக்க அனுமதி கோரி ஆளுநருக்குக் கோப்பு (File) ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கோப்பை தீவிரமாக ஆய்வு செய்த ஆளுநர் கைலாஷ்நாதன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது ஏற்கனவே சில புகார்கள் இருப்பதைக் சுட்டிக்காட்டினார். அதோடு மட்டுமல்லாமல், "கற்பித்தல் பணியில் உள்ளவர்களை இது போன்ற இதர நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது" என்று கூறி, வேறு தகுதி வாய்ந்த நபரைப் பரிந்துரைக்குமாறு அந்தக் கோப்பை அதிரடியாகத் திருப்பி அனுப்பினார்.

அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசுச் செயலாளர்களை அவசரமாக அழைத்துப் பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்கள் வாபஸ்: பிற அரசுத் துறை மற்றும் அமைச்சர்களின் அலுவலகப் பணிகளில் தற்காலிகமாக ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, மீண்டும் பள்ளி கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

கட்டாய இடமாற்றம்: அரசுத் துறைகளில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும், குறிப்பாகப் பிராந்திய அளவில் இந்த இடமாற்றங்கள் உடனடியாக நடக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கலக்கம் – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு:
ஆளுநரின் இந்த அதிரடி உத்தரவு, பள்ளிகளுக்குச் செல்லாமல் இதர எல்.டி.சி., யு.டி.சி. பணிகளில் சுகம் கண்டு வந்த ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், ஆளுநர் இந்த உத்தரவை வெறும் அறிவிப்போடு நிறுத்தாமல் தீவிரமாகக் கண்காணித்து, பிற துறைகளில் முடங்கியுள்ள அனைத்து ஆசிரியர்களையும் மீண்டும் வகுப்பறைகளுக்குக் கொண்டு வந்து மாணவர்களின் கல்வியைக் காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad