அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேரடி தலைமை ஆசிரியர் நியமனம் - விரக்தியில் சீனியாரிட்டி ஆசிரியர்கள் - Asiriyar.Net

Tuesday, June 2, 2026

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேரடி தலைமை ஆசிரியர் நியமனம் - விரக்தியில் சீனியாரிட்டி ஆசிரியர்கள்




அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நேரடி தலைமை ஆசிரியர் நியமன முறையால் சீனியாரிட்டி ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011-க்கு பின், அரசு பள்ளிகளில் 2014-க்கு பின்னரும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி நிரவல், சுழற்சி முறையில் மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டனர். 

பின்னர் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் மூலம் நிரப்பினர். இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டன.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களை அத்தியாவசிய பணி என்ற அடிப்படையில் உதவி பெறும் பள்ளிகளின் விதியை பயன்படுத்தி நேரடியாக தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்கின்றன. அந்தந்த பள்ளியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.


இதனால் அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படுகிறது. மேலும் மூத்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கினால் புதிய ஆசிரியர் பணியிடம் நிரப்ப முடியாது என்பதால் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.


இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேசன் கூறியது: உபரி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் மூத்த இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்காமல் தலைமை ஆசிரியர் பணியிடத்தை அதிக பணத்தை பெற்று நேரடி நியமனம் மூலம் நிரப்புகின்றனர். இதற்காக மூத்த ஆசிரியரிடம் பதவி உயர்வு வேண்டாம் என கட்டாயப்படுத்தி கடிதம் பெறுகின்றனர். எனவே நேரடி தலைமை ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad