தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித் துறை செயலர் ப.சந்திரமோகன், தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிய கல்வித் தகுதியும் தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருந்தால் அவர்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம்.
அதேபோல், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி பெற்றிருந்தால் அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர பாடங்கள்) நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம்.
பதவி உயர்வுக்கு `டெட்' தேர்ச்சி கட்டாயம் ஆகும். வட்டார கல்வி அலுவலர் (பிஇஓ) பணியிடங்கள் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் மீதமுள்ள 50 சதவீதம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும்.
இதற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டமும் அதோடு பிஎட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிய விதிகளின்படி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பின்னர் `டெட்' தேர்ச்சி தகுதியுடன் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம். இந்த தகுதியுள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இல்லாதபோது நேரடி நியமனமாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும். இந்த பணியை 5 ஆண்டு பூர்த்தி செய்தபிறகே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக முடியும். இவ்வாறு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை எட்டுவதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகிவிடும்.
எனவே முன்னர் இருந்ததுபோல் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment