வருமான வரி - ஏமாற்றப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 16, 2024

வருமான வரி - ஏமாற்றப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்

 



தாத்தா பாட்டி காலம் முதல் வீட்டில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது வாடிக்கை. குழந்தைகளுக்கு சிறு உண்டியல் வாங்கிக் கொடுத்து சேமிக்க ஊக்குவிப்பார்கள். பள்ளிகளிலும் சஞ்சயிகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு சேமிக்கும் பழக்கம் ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படும். 


அரசு எந்தெந்த வழிகள் இருக்கிறதோ அந்தந்த வழிகளில் எல்லாம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வந்தது. சுதந்திர இந்தியாவில் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட  ஆயுள் காப்பீடு போன்ற பல உதாரணங்கள் உண்டு. 


ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி வந்துவிட்டால் போதும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேமிப்பை நோக்கி ஓடுவார்கள். இரண்டு மாதங்கள் அதைப்பற்றியே பேச்சு ஓடும். 


காலாவதியாகிவிட்ட காப்பீடுகளை புதுப்பிப்பதில் தொடங்கி வருமான வரி கழிவுக்கு உட்பட்ட நிலையான வைப்பு நிதிக்கு கடன் வாங்கியாவது கட்டுவதும், தனது சேமநலநிதியின் மாதாந்திரச் சந்தாத் தொகையினை கூட்டுவதும் என்றும் சேமிப்பு.... சேமிப்பு.... என்று அலைந்து திரிந்து அரசு அறிவித்துள்ள வருமான வரிக் கழிவினை முழுதும் பயன்படுத்தி அந்தாண்டின் வருமான வரி கட்டுவதன் அளவைக் குறைக்க பாடுபடுவதே ஏறக்குறைய திருவிழாவிற்கு பொருள் சேமிப்பது போல அல்லோகலப்படும். 


ஆனால், இன்று இரண்டு விதமான வருமான வரி செலுத்தும் முறை. ஒன்று,  ஆண்டு வருமானத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்த சேமிப்பிற்கான கழிவுத் தொகை ரூ. 1,50,000ஐக் கழித்து மீதம் உள்ள தொகைக்கு வருமான வரி செலுத்துவது. இரண்டு, எந்தச் சேமிப்பும் காட்டாமல் நேரடியாக ஆண்டு மொத்த வருமானத்தை தற்போதைய ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முறையினைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது. 


ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அவர்களின் இயக்கங்களும் இந்த இரண்டு முறைகளில் எந்த முறையினைத் தேர்ந்தெடுத்தால் வருமான வரி கட்டுவது குறையும் என்று கடந்த சில ஆண்டுகளில் பட்டிமன்றம் நடத்தி கடைசியில் சேமிப்புக் கணக்கினைக் காட்டாமல் நேரடியாக வருமான வரி கணக்கிடுவதில்தான் வருமான வரி குறைகிறது என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு , அதையே இந்த ஆண்டு அலுவலகத்தில் நிரந்தர சாசனமாக எழுதி அலுவலகத்தில் பதிந்து இனி இந்த வழியில்தான் எனது வருமான வரி பிடித்தம் என்று முடிந்த முடிவாக தலைவிதி நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. 


இதன் மூலம் பழைய நடைமுறை காலாவதியாகிவிடுகிறது. இப்போது ஜியோ இலவசமாக நமக்குக் கொடுத்த சிம்கார்டு ஏனோ சம்பந்தம் இல்லாமல் நினைவுக்கு வருகிறது. எரிவாயு சிலிண்டருக்குக் கொடுத்த மானியம்கூட ஏனோ நினைவில் வந்து வந்து போகிறது.


சர்வதேச பொருளாதார மந்த நிலை 1985, 1990 - 1993, 1998 மற்றும் 2001 - 2002 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட போது, உலகம் முழுதும் உள்ள நாடுகளில், நுகர்வுக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் நாடுகள் அத்தனையும் அடிவாங்கிய சூழலில் பெரிதும் பாதிக்காத நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். 


அதில் குறிப்பாக இந்தியா பெரிதும் அடிவாங்கவில்லை. ஏனெனில், பழங்காலந்தொட்டே அவர்கள் இரத்தத்தில் ஊறி கடைப்பிடிக்கும் சேமிக்கும் பழக்கமாகும். இதனையே வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும் போது நமது நாட்டின் பொருளாதார அறிஞரும், முன்னாள் பாரதப் பிரதமருமான மதிப்பிற்குரிய மன்மோகன் சிங் அவர்கள் கூறினார். 


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருடந்தோறும் கட்டாயச் சேமிப்பாக ஜனவரி பிப்ரவரிகளில் வருமான வரிக்காகவாவது சேமிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வந்தனர். சேமிப்பிற்கு சேமிப்பு. 


சேமிப்பிற்கான குறைந்தபட்சமேனும் வட்டி. வருமான வரியிலும் கழிவு. வங்கிகளும் நிலையான சேமிப்பின் மூலம் வரும் வருவாயினை, தொழில் தொடங்குவோருக்கு, கல்விக் கடன் பெறுவோருக்கு, தனி நபர் கடன் பெருவோருக்கு, வீடு கட்ட கடன் பெறுவோருக்கு என்று வட்டிக்குக் கொடுப்பதன் மூலம் வங்கிக்கும் வருவாய். ஆக மொத்தத்தில், பணம் எல்லோருக்கும் பணமாகச் சேர்த்தது. 


ஆனால், இன்று. பலர் தன் ஆயுள் காப்பீடுகளைக்கூட கட்டாமல் விட்டுவிட்டதனை அறிய முடிகிறது. வங்கிகளில் சேமிக்கப்படும் சேமிப்புகளுக்கும் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. சாதாரண சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்குக்கூட வரி விதிப்படுவதால் வங்கிகளின் மூலம் பண பரிவர்த்தனை செய்வதனையே பெருவாரியானவர்கள் கவலையுடன்  தவிர்க்கக்கூடிய நிலை உள்ளது. 


புதிய வருமான வரி செலுத்தும் முறையினை இன்றைய ஒன்றிய அரசு மிகவும் கெட்டிக்காரத்தனமாக அறிமுகம் செய்து எல்லோரையும் ஏமாற்றி நடைமுறைப்படுத்தி உள்ளது. உண்மையில் என்ன செய்து இருக்க வேண்டும்? கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிதியமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய ப. சிதம்பரம் அவர்கள் கடைசியாக அறிவித்த சேமிப்பிற்கான கழிவு தொகை 1,50,000 லிருந்து இன்றைய பொருளாதார புள்ளி விவரத்திற்கு ஏற்ப 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தி இருக்க வேண்டும். 


ஆனால், அதை விடுத்து புதிய முறை என்று அறிவித்து அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர்களை அந்தச் சிந்தனையே எழ விடாமல் மடைமாற்றி புதிய வருமான வரிக் கணக்கின் மூலம் சற்றே சிக்கனம் இருப்பது போலக்காட்டி இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்கிற வாய்ப்பினை உருவாக்குவது போல உருவாக்கி இன்று மீளா முடிவிற்கு எல்லோரையும் அழைத்து வந்து விட்டார்.


உலக நாடுகளில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. இந்திய மக்களை மடைமாற்றும் உத்தியின் மூலம் சேமிப்பற்ற நுகர்வோராக மாற்றுவதில் வலதுசாரிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். என்ன செய்யப்போகிறோம் நாம்?


கட்டுரை - பூவை உமாபாலன். 


Post Top Ad