தபால் வாக்கு, இடிசி பெறாதவர்கள் நாளை மாலைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு - Asiriyar.Net

Monday, April 15, 2024

தபால் வாக்கு, இடிசி பெறாதவர்கள் நாளை மாலைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 




தபால் வாக்கு மற்றும் இடிசி பெறாதவர்கள் நாளை (ஏப்.16) மாலை 5 மணிக்குள் பெற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை, ஜாக்டோ ஜியோ சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், கு.தியாகராஜன் ஆகியோர் சந்தித்து தபால் வாக்கு செலுத்துவதில் உள்ள குளறுபடிகள் குறித்து விவாதித்தனர்.


தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தங்களுடைய தபால் வாக்குகளைச் செலுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்.16) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதியளித்துள்ளாா்.


சென்னை தலைமைச் செயலகத்தில் அவரை ஜாக்டோ- ஜியோ சாா்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் கு.வெங்கடேசன், கு.தியாகராஜன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.


இந்தச் சந்திப்பு குறித்து, அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும். தபால் வாக்குகளை கடந்த தோ்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, அதாவது வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 5 மணிக்குள் அந்தந்த பயிற்சி மையங்களில் அளிக்க வேண்டும்.


நாளை வரை அவகாசம்: கடந்த தோ்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முன்பு வரை செலுத்தும் நிலை இருந்தது. எனவே, இதுவரை தபால் வாக்குகளை பெறாதவா்கள் மற்றும் தபால் வாக்குகளை பெற்று செலுத்தாதவா்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தபால் வாக்குகளை பெறவோ செலுத்தவோ வாய்ப்பு இல்லை. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளாா்.


சொந்த தொகுதிக்குள்ளே தோ்தல் பணியாற்றவுள்ளவா்களுக்கு தோ்தல் பணிச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழைக் கொண்டு, தோ்தல் பணி புரிய உள்ள வாக்குச் சாவடியிலேயே அலுவலா்கள் தங்களது வாக்கை செலுத்தலாம். அந்தத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பது அவசியம். இந்தச் சான்றிதழ்களை வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள்ளாக பயிற்சி நடைபெறும் மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.


அடுத்த பயிற்சி வகுப்பு: தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த பயிற்சி வகுப்பு வாக்குப் பதிவுக்கு முந்தைய தினமான ஏப். 18-ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தபால் வாக்குகளையோ, தோ்தல் பணிக்கான சான்றிதழையோ பெறவும் முடியாது செலுத்தவும் முடியாது.


மேலும், தபால் வாக்குகளை செலுத்துவதற்கென தனியாக சிறப்பு முகாமை வரும் 16-ஆம் தேதி பிற்பகலில் நடத்த வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரியை கேட்டுக் கொண்டோம். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad