தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - Asiriyar.Net

Sunday, April 14, 2024

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024

 
ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.


ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும்.


அதேபோல் சுபத்தினங்கள், புதிய வருடங்களில் கிரகங்களின் நிலைகளை பொருத்தும் உங்கள் ராசி பலன்கள் மாறும். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.


பெற்றோர், பெரியோரை மதித்தல், மகான்களை வணங்குதல், குலதெய்வத்தைக் கும்பிடுதல், பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்க திருப்பணி செய்தல், ஏழை, எளியோர்க்கு உதவுதல் இவை யாவும் இந்தத் தமிழ்ப்புத்தாண்டு முழுக்க நல்லன நடக்கச் செய்யும். இதன் தொடர்ச்சியாக 12 ராசிகளின் பலன்களை பார்க்கலாம்.


மேஷம்:

உயர்வுகள் வரக்கூடிய உன்னதமான ஆண்டு. பணியிடத்தில் பதவி, இடமாற்றம், ஊதிய உயர்வுகள் கைகூடும். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்பட்டு தகுந்த பெருமைகள் தரப்படும். திடீர் பொறுப்பும், புகழும் திக்குமுக்காட வைக்கும். சமயத்தில் உடனிருப்போருடன் அனுசரித்துப் போகப் பழகினால், கிரகங்களின் அனுகிரகம் நிரந்தரமாக இருக்கும். குழப்பமும் கூச்சலுமாக இருந்த குடும்ப சூழல், இனி அமைதியும் ஆனந்தமுமாக மாறத்தொடங்கும். தம்பதியருக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை செய்துமுடிக்க சந்தர்ப்பம் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும்க. வீடு, வாகனம், மனை, சொத்து சேரும். செய்யும் தொழில் பெரும் வளர்ச்சி பெறும். அயல்நாட்டு வர்த்தகங்கள் கைகூடும். புதிய முதலீடுகளை முறையாக யோசித்து செய்வது நல்லது. விவசாயத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் உருவாகும். மேலிடத்தின் வார்த்தைகளைக் கனவிலும் மீறவேண்டாம். ஜாமீன் தரும்போது நிதானம் அவசியம்.


மாணவர்களுக்கு மகத்தான நன்மைகள் கிட்டும். பெற்றோர் பெரியோர் வார்த்தகளைக் கேட்டால் அதைத் தக்கவைத்துக்கொள்ளலாம். கலை, படைப்புத் துறையினர் திறமைகள் பளிச்சிடும். புதிய எண்ணங்கள் தோன்றி வாழ்க்கை புதுவண்ணம் பெறும். அடிவயிறு, கழிவு உறுப்பு, முதுகு,அஜீரணம் உபாதைகள் வரலாம். செந்தூர் முருகன் வழிபாடு செழிப்புதரும்.


ரிஷபம்:


உங்களுக்கு நல்லவை அதிகரிக்கும் ஆண்டு. பணியிடத்தில் இருந்த பாதகமான சூழல் மறையும். திறமைகள் மதிக்கப்பட்டு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பொறுப்புகளில் அலட்சியமும் அவசரமும் கூடவே கூடாது. கையெழுத்திடும் சமயங்களில் கவனமா இருங்கள். முக்கியமான கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு வாக்குவாதமும் கூடாது. ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து லாபம் தரும். வாரிசுகளால் பெருமை சேரும். பழைய கடன்களை பைசல் செய்ய சந்தர்ப்பம் அமையும். குடும்பப் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய மூன்றாம் நபரை அணுக வேண்டாம். எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.


வெளிநாட்டு வர்த்தகத்தில் உரிய நடைமுறைகளை முழுமையாகக் கடைபிடியுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். எதிரி பலம் ஒடுங்கும். பொது இடங்களில் நாவடக்கம் அவசியம். மாணவர்கள் திறமைக்கு உரிய உயர்வுகளைப் பெறலாம். சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கலாம். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை போது, வீணான ஜம்பத்தால் விலக்கவேண்டாம். அவசியம் இல்லாத இரவுநேரப் பயணத்தைத் தவிருங்கள். விஷஜந்துகள், வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து விலகியே இருங்கள். சர்க்கரை, மூட்டுத் தேய்மானம், கொழுப்பு அதிகரிப்பு, காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள் வரலாம். பஞ்சவடி அனுமன் வழிபாடு, பரிபூரண நன்மை தரும்.


மிதுனம்:


மாற்றங்கள் வரக்கூடிய வருடம். அலுவலகத்தில் உரிய உயர்வுகள் தேடிவரும்.அவசரமும் அலட்சியமும் எந்தப் பணியிலும் வேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வெளிநாடு, வெளியூர் சென்று பணியாற்றும் வாய்ப்பு சிலருக்கு வரலாம். இடமாற்றத்தைத் தவிர்க்காமல் ஏற்பது எதிர்காலத்தை வளமாக்கும். குடும்பத்துல குதூகலம் நிறையத்தொடங்கும். உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியத் தடைகள் விலகும். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க நேரம் அமையும். குலதெய்வ வழிபாட்டிலும், வார்த்தைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உணர்ந்து நடப்பது உத்தமம். செய்யும் தொழிலில் திடீர்வளர்ச்சி ஏற்படும்.அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டப் புறம்பு சமாசாரங்கள் கலந்துவிடாமல் கவனமாக இருங்கள். பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். அரசு, அரசியல் துறைசார்ந்தவர்கள் அடங்கியும் முடங்கியும் இருந்த சூழல் மறையும். புறம்பேசும் நபர்களை உடனே புறம்தள்ளுங்கள். உடனிருக்கும் யாரிடமும் வீண் கடுமை வேண்டாம்.


கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளால் முன்னேறலாம். படைப்பு ரகசியங்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம். மாணவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தர்வாதம் கிடைக்கும். அதேசமயம், அநாவசிய கேளிக்கைகளைத் தவிர்ப்பது அவசியம். போதுமான ஓய்வு இல்லாமல் தொலைதூரம் வாகனத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம். கொழுப்புசத்து அதிகரிப்பு, ரத்தநாள அடைப்பு காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள் வரலாம். ஏழுமலையான், அலர்மேல்மங்கை வழிபாடு, ஏற்றத்தைக் கொடுக்கும்.


கடகம்:


பொறுப்புடன் செயல்படவேண்டிய ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும் தாமதமானாலும் பதவி, பொறுப்பு, இடமாற்றம் உங்கள் மனம்போல கைகூடும். பொறுப்புகளை திட்டமிட்டு செய்தால், உங்கள் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். வேலை தேடுவோர்க்கு மனம்போல வேலை அமையும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை உருவாகும். சுபகாரியத் தடைகள் நீங்க பெற்றோர் பெரியோர் வழிகாட்டலைக் கேளுங்கள். நட்புகள் விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். செல்வுகளை சுப செலவுகளாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். செய்யும் தொழிலில் லாபத்தின் அளவுகோல் அதிகரிக்கும் கூட்டமைப்பில் சேர்ந்து செயல்படும் அமைப்பு உருவாகும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தடைகள் நீங்கும். கடன் தருவது, பெறுவதில் நிதானம் முக்கியம்.


அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு அனுகூலமான காலகட்டம். மேலிடத்தின் ஆதரவு அதிகரிக்கும். உடனிருந்தே உபத்திரவம் செய்பவர்களை உடனடியாக ஒதுக்குவது முக்கியம். கலைஞர்கள், படைப்பாளிகள் சோம்பல் தவிர்த்தால் வாய்ப்புகளைப் பெறலாம். செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடங்கள். மாணவர்களுக்கு மனம்போல கல்வி வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்குப் படிக்கும்போதே எதிர்காலப் பணிக்கு உத்தரவாதம் கிடைக்கும். வாகனப் பழுதினை உடனுக்குடன் சீரமையுங்கள். உடன் வரும் நட்புகளிடம் கவனமாக இருங்கள். தூக்கமின்மை, தோள்பட்டைவலி, அஜீரணம், நரம்பு, பற்களில் உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனை வணங்குவது கஷ்டமெல்லாத்தையும் போக்கும்.


சிம்மம்:


அமைதியாகச் செயல்படவேண்டிய ஆண்டு. அலுவலகத்தில் ஒருபோதும் அவசரம் அலட்சியம் கூடாது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம். தவிர்க்காமல் ஏற்பது நல்லது. மேலதிகாரியிடம் பேசும்போது வீண் கர்வம் தவிருங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேட்டால், நல்லவை நிச்சயம் நடக்கும். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் வரும். அதைத் தக்கவைக்க விட்டுக்கொடுத்தல் முக்கியம். யாருடைய தலையீட்டையும் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.


அசையும் அசையா பொருட்சேர்க்கை ஏற்படும். கடன் தருவது, பெறுவதில் கவனம் முக்கியம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் சந்தேகம் வேண்டாம். ஏற்றுமதி, இறக்குமதியில் ஒப்பந்தங்களை மதித்து செயல்படுங்கள். வங்கிக் கடன்களை தேவையின்றி வாங்குவதைத் தவிருங்கள். அரசு, அரசியல்துறையினருக்கு பொறுமை மிகமிக முக்கியம். தேவையில்லாத வாக்குறுதிகள் தருவதைத் தவிருங்கள். மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பு கனவிலும் வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். சஞ்சலமும் சபலமும் எட்டிப்பார்க்காமல் கவனமாக இருங்கள். மாணவர்கள் மனம் போல் மதிப்பு உயரும். சகவாச தோஷம் தெரிந்தால் சட்டென்று விலகுவது முக்கியம். பயணங்களில் கவனச்சிதறல் கூடாது. தொலைதூர பயணத்தில் உடைமைகள் பத்திரம்.


மூட்டுகள், நரம்புகள், பற்கள், கழுத்து, ஒற்றைத்தலைவலி, மன அழுத்த உபாதைகள் வரலாம். கற்பக கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.


கன்னி:


ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய ஆண்டு. பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். புதிய மாற்றங்களால் நீங்கள் எதிர்பார்த்த ஏற்றங்கள் வரும். பதவி, ஊதியம் உயரும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டு பயணவாய்ப்பு சிலருக்கு தேடி வரும். புதிய பணி மாறும் முன் யோசித்து செய்வது நல்லது., குடும்பத்தில் நல்லவைகள் நடக்க தொடங்கும். வாழ்க்கை துணையால் அனுகூலங்கள் ஏற்படும். வாரிசுகளை கண்டிப்பதில் நிதானம் முக்கியம். அசையும், அசையா பொருட்சேர்க்கை ஏற்படும்.


பிற மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. வயதில் முதியவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். பல கால கனவுகள் ஈடேறத்தொடங்கும். சிலருக்கு தொழில் மாற்றமும் அதனால் லாபமும் உண்டு. அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை ஆதாயத்தை அதிகரிக்கும். அரசு, அரசியல் துறைகளில் உள்ளோருக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். சிலருக்கு புதிய பதவி பொறுப்பு வாய்ப்புகள் கைக்கூடும்.


பிறர் விஷயங்கள் எதிலும் வீணாக தலையீடுவதை தவிர்த்து விடுங்கள். கலைஞர் படைப்பாளிகளுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். பலகால எதிர்பார்ப்புகள் ஈடேறி வாழ்க்கை பிரகாசிக்கும். மாணவர்கள் மறதியை மறந்தால் மதிப்பெண் உயரும். ஆசிரியர்கள் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. தொலைதூர பயணத்தில் உடன் வருபவர்களிடம் இருந்து உணவு, பானம் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். குதிங்கால், கண்கள், வயிறு உபாதைகள் வரலாம். இஷ்டப்பட்ட மகானைக் கும்பிடுவதன் மூலம் உங்களுக்கு மகத்தான நன்மை கிட்டும்.


துலாம்:


வார்த்தைகளில் நிதானம் இருந்தால், வாழ்க்கையில் வளம் வரும் ஆண்டு. பணியிடத்தில் இதுவரை வகித்த பதவியில் மாற்றம் வரலாம். அதேசமயம் அது எதிர்கால ஏற்றத்துக்கு என உணர்வது நல்லது. சிலருக்கு பணி சார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பும் உண்டு. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தம்பதியரிடையே இருந்த சச்சரவுகள் மறையும். குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனை கேட்டால் சுபகாரியங்கள் கைகூடும். வாரிசுகள் உடல்நலம் சீராகும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. செய்யும் தொழில் எதுவானாலும் உழைப்புக்கு உரிய உயர்வுகள் வரும். அயல்நாட்டு வர்த்தகம் தடைநீங்கிக் கைகூடும். பூமி சார்ந்த வர்த்தகங்களில் நிதானம் தேவை. சட்டப்புறம்பு விவகாரங்களுக்கு கனவிலும் சம்மதிக்க வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு படிப்படியாக உயர்வுகள் வந்து சேரும். மேலிடத்திடம் பேசும்போது பணிவே நல்லது. யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள்.


கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமைகள் வெளிப்படும். புதிய வாய்ப்புகளில் வீணாக பேதம் பார்க்க வேண்டாம். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது முக்கியம். இரவில் வெகுநேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். வாகனத்தில் நிதானம் முக்கியம். தனியே வெகுதொலைதூரம் வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டாம். அடிவயிறு, முதுகு, நரம்பு, கண் உபாதைகள் வரலாம். அங்காளம்மனை ஆராதிப்பது, ஆனந்தம் சேர்க்கும்.


விருச்சிகம்:


தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு. பணியிடத்தில் உங்கள் பதவி, பொறுப்பு, ஊதியம் உயரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு கிடைக்கும். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் அவை ஆதாயமே தரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும் விலகி இருந்த உறவுகள் தேடிவந்து அன்புகாட்டும். சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். ஆடை, ஆபரணம், பொருட்சேர்க்கை ஏற்படும்.புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பூர்வீக சொத்து சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்கும். அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கனரக தொழிலில் இருப்போர்க்கு கவனச் சிதறல் கூடாது.


அரசியல், அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்பு வந்து சேரும். முகஸ்துதி நபர்களை உடனே உதறுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளுக்குப் பஞ்சமிருக்காது. உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். மாணவர்கள், பொறுப்பு உணர்வுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்கள் வழிகாட்டலை அலட்சியப்படுத்த வேண்டாம். ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், அடிவயிறு, கால்வலி உபாதைகள் வரலாம். பழநி ராஜ அலங்கார முருகனை வணங்குவது, பரிபூரண நன்மை தரும்.


தனுசு:


கவனமாகச் செயல்பட்டால் கணிசமான நன்மைகள் கிட்டும் ஆண்டு. அலுவலகத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். எந்த சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் கூடாது. மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் வேண்டாம். இப்போதைய பொறுமையே எதிர்கால ஏற்றம். இல்லத்தில் நல்லவைக்குக் குறைவிருக்காது. அவை நிலைக்க நாவடக்கம் முக்கியம். தம்பதியர் பிரச்னையில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை பத்திரமாக வையுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் வர்த்தகம் வாணிபத்தில் முறையான உழைப்பு இருந்தால் நிலையான முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் அலட்சியம் கூடாது. அரசு,அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாகச் செயல்படுவது நல்லது. பொது இடத்தில் வாக்குறுதிகள் தரும் முன் யோசியுங்கள். யாருக்கும் ஜாமீன், ஜவாப் தரவேண்டாம்.


கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். படைப்பு சார்ந்த ரகசியங்களை ஜம்பத்துக்காகப் பகிர வேண்டாம். மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் பெறுவீர்கள். இரவில் வெளி இடங்களில் தங்குவதை இயன்றவரை தவிருங்கள். வாகத்தில் கவனச் சிதறல் கூடாது. பிறர் தரும் உணவு, பானம் தவிருங்கள். உணவை முறைப்படுத்துங்கள். அடிவயிறு, கழிவு உறுப்பு, முக உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மை தரும்.


மகரம்:


எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். ஏற்றமும் மாற்றமும் எண்ணப்படியே வந்து சேரும். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம்.தவிர்க்க வேண்டாம். பொறுப்பு உயர்வை பொறுப்புடன் ஏற்றிடுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். விசேஷங்கள் தொடர்ச்சியாக வரும். உறவுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை சேரும். ஆன்மிகப் பயணங்கள் செல்லும் சந்தர்ப்பம் அமையும். வீடு, வாகனம், ஆபரணம் சேரும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். வர்த்தகம், வாணிபம் எதுவானாலும் அதில் லாபம் வளர்ச்சியாகும். புதிய முதலீடுகளை தெரிந்த தொழிலில் மட்டும் செய்வது நல்லது. வர்த்தக நிபந்தனைகளை யாருக்காகவும் மீறவேண்டாம்.


அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு, பெருமை, புகழ் சேரும். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். யாருக்காகவும் சட்டப்புறம்பு சகதியில் கைவைக்க வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு சோதனைகள் நீங்கும் காலம். வாய்ப்புகள், தொடர்ச்சியாக வரும். மாணவர்கள் மறதியை மறக்க, அன்றாடம் படிப்பது அவசியம். முதுகு, கழுத்து, அடிவயிறு, பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். பிள்ளையாரைக் கும்பிடுவது, வாழ்வை பிரகாசமாக்கும்.


கும்பம்:


அடக்கமாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மை கிட்டும் ஆண்டு. பணியிடத்தில் துணிவை விடப் பணிவே நல்லது. உங்கள் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். அதற்குப் பொறுமையே முக்கியம். வீட்டில் நிம்மதி நிலவும். அது நிலைக்க விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். மூன்றாம் நபரை மத்தியஸ்தம் செய்ய அழைக்க வேண்டாம். அன்பும் அமைதியுமே அனைத்திலும் நன்மை செய்யும். வர்த்தகத்தில் திடீர் வளர்ச்சி ஏற்படும். இந்த சமயத்தில் உழைப்பை உறுதியாக்குவது அவசியம். உங்களிடம் பணிபுரிவோரிடம் வீண் கடுமை வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரல் பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள்.


அரசு, அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள். கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். கலைஞர்கள், படைப்பாளர்களுக்கு முயற்சிக்கு உரிய வாய்ப்பு வரும். படைப்பில் நேரடி கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டினால், சாதிக்கலாம். விடியற்காலை படிப்பு, விசேஷ நன்மை தரும். தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு உபாதை, படபடப்பு உபாதைகள் வரலாம். தினமும் மன, உடற்பயிற்சி செய்வது நல்லது. சிவனையும் பார்வதியையும் கும்பிடுங்கள். வாழ்க்கை சிறக்கும்.


மீனம்:


தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு. அலுவலகத்தில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். எல்லாம் தெரியும் நினைவும் ஏனோ தானோ செயலும் கூடாது. இடமாற்றம் தாமதமானாலும் கைகூடும். பதவி, ஊதிய உயர்வு வேண்டுவோர் வீண் புலம்பல் தவிர்ப்பது முக்கியம். சிலருக்குப் புதிய பணிவாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். சுபகாரியங்களும் உறவுகள் வருகையும் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவை அறவே தவிருங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் கிட்டும்.


வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். அது தொடர, தளர்ச்சி இல்லா உழைப்பு முக்கியம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். புதிய முதலீடுகளை நிதானித்துச் செய்யுங்கள்.

அரசு, அரசியல்சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். முகஸ்துதி நபர்களை விலக்குங்கள். பதவி, பொறுப்புகள் தாமதமானாலும் கைகூடும். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடிவரும். செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை சற்றும் மீறவேண்டாம். மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் பெறுவீர்கள்.


சகவாசதோஷத்தை அடையாளம் கண்டு உடனே உதறுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். களியாட்டப் பயணங்களைத் தவிருங்கள். அலர்ஜி, அல்சர், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். கோதண்டராமரை கும்பிடுவது, கோடி கோடி நன்மைகளை தரும்.


Post Top Ad