தேர்தல் பணி - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - Asiriyar.Net

Sunday, April 7, 2024

தேர்தல் பணி - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

 



போலி மருத்துவ காரணங்கள் கூறி, தேர்தல் பணிகளை புறக்கணிக்கக்கூடாது என, ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஏப்ரல், 19ல் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது; ஜூன் 1ல் ஏழாம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.


தமிழகத்தில் ஏப்., 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.


ஓட்டுச்சாவடிகளில், அலுவலர்களாக பணியாற்ற பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


இதற்காக, ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு குறித்து, உத்தேச பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில், மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்களில் சிலர், மருத்துவ சான்றிதழ் அடிப்படையில், தங்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு தருமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வருகின்றனர்.


இதுகுறித்து, கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சிலர் போலி காரணங்களுடன் மருத்துவ சான்றிதழ் கொடுத்து, தேர்தல் பணியை புறக்கணிக்க முயற்சிப்பது தெரியவந்து உள்ளது.


அந்த ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


போலி காரணங்களுடன் தேர்தல் பணியை புறக்கணித்தால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என, ஆசிரியர்களை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



Post Top Ad