பள்ளிக்கு வராத 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை! - Asiriyar.Net

Wednesday, November 1, 2023

பள்ளிக்கு வராத 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை!

 '12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வினை எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்யும் போது, 12ஆம் வகுப்பில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர் பட்டியலை நீக்கலாம்' என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


மேலும், கடந்தாண்டு எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் இடம்பெற்ற மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத அனுமதி கிடைத்தும், 50 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்வுக்கு வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 


இதனால், 2023-24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர் பட்டியலில் வருகைப்பதிவேடு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் 11ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 100%, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத வேண்டும் என கூறி, ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கே சென்று அழைத்தப்போதும் வேலைக்கு சென்றுள்ளதால் வர முடியாது என பெற்றோர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தீபாவளி பண்டிகை முடிந்தப் பின்னர் வெளியிடப்படும் என இத்துறை இயக்குனர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி நேற்று அறிவித்தார்.இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு இது தொடர்பாக இன்று (நவ.1) கடிதம் அனுப்பியுள்ளார். 


அதில், '2023- 24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 2023, மார்ச் மாதம் தேர்வு எழுதி 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே தயார் செய்யப்பட உள்ளது.


எனவே, அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களும் நவம்பர் 3ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password பயன்படுத்தி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களது பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து நவம்பர் 10ஆம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியப் பிறகு, அரசிதழில் பெயர் மாற்றம் செய்த மாணவரின் பெயர் மட்டும் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியப் பின்னர், மாணவர் வேறு பள்ளியில் சேர்ந்தால், அவரின் பெயர் பட்டியல் மாறியப் பள்ளியில் சேர்க்க முடியும். 


ஆனால், 11ஆம் வகுப்பில் படித்த பாடத்தொகுப்பு, பயிற்று மாெழி, மாெழிப்பாடம் ஆகியவற்றில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர் பெயரை பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், 12ஆம் வகுப்பு பெயர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது.பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரை பெயர் பட்டியில் இருந்து நீக்கமும் செய்யக்கூடாது. 


எனினும், பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கப்படாத, நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரை 12ஆம் வகுப்பு பெயர் பட்டியலில் கட்டாயம் நீக்கம் செய்ய வேண்டும் எனில், முதன்மைக்கல்வி அலுவலரின் ஒப்புதல் கடிதத்துடன், உதவித் தேர்வு இயக்குனரிடம் சமர்பிக்க வேண்டும். பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 9498383081 / 9498383075 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Post Top Ad