முதுகலை ஆசிரியர்கள் ஏமாற்றம் - நேரம், காலம் பார்க்காது உழைத்தும் பலனில்லை - Asiriyar.Net

Tuesday, September 5, 2023

முதுகலை ஆசிரியர்கள் ஏமாற்றம் - நேரம், காலம் பார்க்காது உழைத்தும் பலனில்லை

 

விருதுநகர் மாவட்ட நல்லாசிரியர் விருது அறிவிப்பில் முதுகலை ஆசிரியர் ஒருவர் கூட இடம் பெறாதது முதுகலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் நேற்று முன் தினம் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட முதுகலை ஆசிரியர் இல்லை. இத்தனைக்கும் 2022--23 கல்வியாண்டுக்கான இந்த விருதில் அதே கல்வியாண்டில் மாநில அளவில் பிளஸ் டூ தேர்ச்சியில் முதலிடம் பிடித்ததற்கு காரணமாக இருந்த முதுகலை ஆசிரியர்கள் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.


இது மாவட்ட ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்களின் பதின் பருவத்தில் பிளஸ் 1, பிளஸ் டூ படிப்பர். அந்த வயதில் ஆர்வ கோளாறாகவும், தவறுதலாகவும் ஏதாவது செய்வர். அதை கண்டித்து அவர்களை நல்வழிப்படுத்தி கல்வியின் அவசியத்தை உணர்த்தி உயர்கல்விக்கு வழிகாட்டுவதில் முதுகலை ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


மேலும் மாவட்டத்திலே பல முதுகலை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவியும் உள்ளனர். இந்த வயது மாணவர்கள் தான் தங்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டர். நன்மதிப்பீடுகளை அளவீடாக கொண்டு இது போன்ற விருது வழங்குவது எதிர்கால தலைமுறைகளையும் ஊக்குவிக்கும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


இது குறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முத்தையா கூறியதாவது: இந்த ஆண்டு தகுதி உடைய முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பித்தும் அதில் ஒருவர் பெயர் கூட விருதுப் பட்டியலில் இடம் பெறவில்லை. பல ஆண்டுகளாகளாகவே ஒன்று அல்லது இரண்டைத் தவிர ஒரு முதுகலை ஆசிரியருக்குக் கூட மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது வழங்கப்படவில்லை.


பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாவட்டத்தை மாநிலத்திலே முதலிடம் பெற செய்த பெருமை முதுகலை ஆசிரியர்களையே சாரும். சனி, ஞாயிறு, பொங்கல் தீபாவளி அரசு விடுப்புகள் என்று கூடப் பாராமல் மாணவர்களின் நலனுக்காக எப்போதும உழைத்துக் கொண்டு நுாறு சதவீதம் தேர்ச்சிக்கும், மாநில அளவில் முதலிடம் வருவதற்கும் ஆசிரியர்கள் உழைக்கின்றனர்.


மேலும் கல்வி சாரா பணிகள், பாடத்திற்கு இணையான செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த கடின உழைப்பு கொண்ட விருதுநகர் மாவட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படாததற்கு எங்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது, என்றார்.


Post Top Ad