தலைமையாசிரியை பேண்ட் வாத்திய இசையுடன், மலர் தூவி வரவேற்ற மாணவிகள்! - Asiriyar.Net

Thursday, September 7, 2023

தலைமையாசிரியை பேண்ட் வாத்திய இசையுடன், மலர் தூவி வரவேற்ற மாணவிகள்!

 நல்லாசிரியர் விருது பெற்று திரும்பிய, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியை பேண்ட் வாத்திய இசையுடன், மலர் தூவி மாணவிகள் வரவேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் உள்பட தமிழக அளவில் 386 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 


சென்னையில் நடந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைவருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.


இதனையடுத்து விருது பெற்று சென்னையில் இருந்து திருப்பூர் திரும்பிய, ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், அலுவலக பணியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் சந்தன மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் நிறுத்தத்தில் இருந்து தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரியை நடைபயணமாக அழைத்து வரப்பட்டார். 


அப்போது சீருடை அணிந்த பள்ளி பேண்ட் வாத்திய குழு மாணவிகள் பேண்ட் வாத்தியத்துடன், என்.சி.சி, சாரணியர், பேட்ரோல், செஞ்சிலுவை சங்க மாணவிகளின் கம்பீர அணிவகுப்புடன் இருபுறமும் பள்ளி மாணவிகள் நின்றுகொண்டு தங்கள் தலைமையாசிரியைக்கு வாழ்த்து சொல்லி வரவேற்றனர்.


பின்னர் பள்ளி வளாகத்துக்குள் வெல்கம் என்று ரோஜா பூக்களால் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மாணவிகள் தலைமையாசிரியை மீது பூக்கள் தூவி வரவேற்றனர். 


அப்போது பள்ளி உதவி தலைமையாசிரியை நபிஷா பேகம் தலைமை தாங்கி அவருக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு இந்நாள் முன்னாள் நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Post Top Ad