ஆசிரியர் தினத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவன் கைது - Asiriyar.Net

Wednesday, September 6, 2023

ஆசிரியர் தினத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவன் கைது

 

திருவொற்றியூர், விம்கோ நகரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 30ம் தேதி முதல் மாணவர்களுக்கான 2ம் கட்ட பருவத்தேர்வு நடக்கிறது.


இதில், பிளஸ் 2 மாணவர் ஒருவர், இரு வாரங்களாக பள்ளிக்கும் வரவில்லை; தேர்வும் எழுதவில்லை. நேற்று அவரது தந்தை, மாணவரை தேர்வு எழுத வைப்பதற்காக பள்ளிக்கு அழைத்து வந்து உள்ளார்.


மேலும் பள்ளிக்கு வராததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் தேர்வு எழுத அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, மாணவரை ஆசிரியர்கள் வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.


தேர்வு அறையில், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆசிரியர் சேகர், 46, பணியில் இருந்தார். தேர்வு அறைக்கு சென்ற மாணவன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'கூலிப்' போதைப்பொருளை சாப்பிட்டு, போதையில்


படுத்து துாங்கி உள்ளான். தேர்வு அறையில் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் சேகர், மாணவரை தட்டி எழுப்பி தேர்வு எழுதுமாறு கூறியுள்ளார்.


மேலும், அவரிடம் இருந்து போதை பொருள் பாக்கெட்கள் சிக்கின. இதையடுத்து ஆசிரியர் மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவர். ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். மேலும் முகத்தில் சரமாரியாக தாக்கியதில் முகம் வீங்கி ரத்தம் கொட்டியது.


இதைப் பார்த்து அருகில் இருந்த மாணவர்கள் கத்தவே, மற்ற ஆசிரியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், 17 வயது மாணவரை கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவனால், ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Post Top Ad