நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பள்ளி கல்வித்துறை செயலர் ஐகோர்ட் கிளையில் ஆஜரானார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலைச் ேசர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 2.8.1988ல் நியமனம் ஆனார்.
மாதம் ரூ.70 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பகுதி நேரமாக பணியாற்றினார். பணியை வரன்முறை செய்யக் கோரிய வழக்கில், சின்னத்தாய் பணியை வரன்முறை செய்து, அவருக்குரிய காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே சின்னத்தாய் இறந்தார். இதனால், அவரது மகன் பரமன் தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோருக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மறுத்து, இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பிப்பதாகவும், இருவரையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகினர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இருவருக்கும் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்யக் கோரி மனு செய்தார். மேலும் நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, பிடிவாரன்டை ரத்து செய்யக் கோரும் மனுவையும் ஏற்றுக் கொண்டார். முன்னதாக ‘‘பிடிவாரன்ட் உத்தரவை ஏன் சென்னை போலீஸ் கமிஷனர் நிறைவேற்றவில்லை? இது வேதனையளிக்கிறது. இதே நிலையை காவல் துறை சாதாரண மனிதரிடமும் பின்பற்றுமா? நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறையை சார்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற 7 ஆண்டுகள் ஆனது ஏற்புடையதல்ல’’ என்றார்.
No comments:
Post a Comment