தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற சண்முகத்துக்கு தமிழக அரசின் ஆலோசகராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் 2019 ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். அவர் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் முதல் மேலும் 3 மாதத்திற்கு அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய அரசுப் பணியில் உள்ள ராஜீவ் ரஞ்சனை விடுவித்து கடந்த 27ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. வழக்கமாக தமிழக பணியில் உள்ள அதிகாரி மத்திய அரசு பணிக்குச் சென்றால் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். ராஜீவ் ரஞ்சன் ஓராண்டுதான் பணியாற்றியுள்ளார்.ஆனால் அவரை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், அவரை புதிய தலைமைச் செயலாளராக நியமிக்க முடிவு செய்து, அரசின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் 47வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு நேற்று அரசாணை வெளியிட்டார். உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த 27ம் தேதி மத்திய பணியாளர் தொகுப்பு மற்றும் நியமன குழுவின் செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் ராஜீவ் ரஞ்சன் தமிழக பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தின் தலைம செயலாளராக உள்ள கே.சண்முகம் ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சனை அந்த இடத்தில் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் ரஞ்சன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1985ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். துணை ஆட்சியராக பணியை தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1995 முதல் 1997 வரை ராஜீவ் ரஞ்சன் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் நிதி மற்றும் தொழில்துறையில் இணை செயலாளராகவும், பின்னர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் ராஜீவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார். பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட ராஜீவ் ரஞ்சன் 2018 முதல் 2020 வரை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றினார். மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 27ம் தேதி தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இந்த சூழ்நிலையில் ராஜீவ் ரஞ்சனை தலைமை செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் அவர் இப்பொறுப்பை ஏற்கிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
* தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமனம்
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கே.சண்முகம் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதற்கிடையில் நேற்றுமுன்தினம் அவருக்கு பிரிவு உபச்சார விழா தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றுமுதல் ஓராண்டுக்கு இப்பொறுப்பில் இருப்பார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படுகிறது. அவருக்கு அகவிலைப்டி, வீட்டு வாடகை படி மற்றும் இதர படிகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து அவர் இன்று அரசின் ஆலோசகராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment