கீழ்பென்னாத்தூரில் அரசு பள்ளி வளாகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரை சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரை, அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் உள்ளிட்ட சிலர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் இரு தினங்களுக்கு முன்பு வேகமாக பரவியது. பள்ளி வளாகத்தில் சீருடையில் இருந்த மாணவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் மகாலட்சுமி விசாரணை செய்ததுடன் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான சிவராஜ் (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தார். இந்த வழக்கில் பத்தாம் வகுப்பு மாணவரை தாக்கிய பிளஸ் 2 மாணவர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவானதால் அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 18-ம் தேதி மாணவர்களின் பெற்றோரை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் இருந்து புகார் அளிக்க முன்வரவில்லை. பெற்றோர்களும் சமாதானமாக செல்வதாக கூறிச் சென்றனர். ஆனால், மாணவரை தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்பேரில் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment