கொரோனா தொற்று மற்றும் தேர்தல் போன்ற காரணங்களை முன்வைத்து பத்தாம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்யலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், கொரோனா குறைந்ததையடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, ஜனவரி மாதம் முதல் மேற்கண்ட இரண்டு வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதை தொடர்ந்து, தற்போது 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்கள் மேனிலை கல்வியை முடித்த பிறகு, உயர்கல்விக்கு செல்லவேண்டும். அதிலும் குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே மாதம் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்து அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதனால் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை முடித்து, புதிய அரசு அமைவது என அனைத்து பணிகளும் மே மாதம் தான் நடக்கும். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வு மே மாதம் நடத்த முடியாமல்கூட போகலாம். அதற்கு பிறகு தேர்வு நடத்தினால், அடுத்த கல்வியாண்டு தள்ளிப் போகும் நிலை ஏற்படும். அதனால், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்தின் போது தேர்வை ரத்து செய்தது போல இந்த ஆண்டும் தேர்வை ரத்து செய்துவிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். அந்த கருத்தின் அடிப்படையில் பத்தாம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்துவிடலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.
No comments:
Post a Comment