12-ம் வகுப்புத் தேர்வுத் தேதியை அறிவித்ததில் எவ்விதக் குழப்பமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியைப் பொறுத்தே பொதுத் தேர்வு அறிவிப்பு இருக்கும் என்று முன்னதாகக் கூறியிருந்த நிலையில், திடீரெனத் தேர்வு குறித்து அறிவித்து, அட்டவணையை வெளியிட்டது ஏன் என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''பள்ளிக் கல்வித்துறை சார்பாக நேற்று (பிப்.16) முதல்வருடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதே, நாமும் அறிவித்துவிடலாமா என்று முதல்வர் கேட்டார். நாங்கள் முன்னதாகவே பொதுத்தேர்வு குறித்த அட்டவணையைத் தயாரித்து வைத்திருந்தோம்.
அதனால் உடனடியாக இன்றே பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. யாரும் இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஒன்றன்பின் ஒன்றாகத் தேர்வு அட்டவணையை அறிவிப்போம்.
விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்துகொள்ள எந்த நிபந்தனையும் இல்லை. அனைத்து விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்து மாவட்டங்கள்தோறும் விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.35 கோடி கேட்டுள்ளோம். மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை.
நூலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக ஆட்களைக் கொண்டு நிரப்பப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.