பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. நீதிமன்றத்தை நாட, முடிவு செய்துள்ளன.
கொரோனா தாக்கம் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கின்றனர். இந்நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது, பெற்றோருக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை கல்வியான, 10ம் வகுப்பை கூட, 'ஆல் பாஸ்' என்று அறிவித்தால், உயர் கல்விக்கு செல்லும் போது, பாதிப்புகள் ஏற்படும். பத்தாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில், மாணவர்களை சேர்க்கும் போது, எந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பது என்பதிலும் பிரச்னை ஏற்படும் என, பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை கூட நடத்தாமல், மாணவர்களை எந்த வகையில் மதிப்பிட்டு, தேர்ச்சி வழங்குவது என்றும், கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில் தேர்வே எழுதாமல், 'ஆல் பாஸ்' ஆன மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்பிலும் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு, பொது தேர்வு எப்படி இருக்கும் என்றே, தெரியாத நிலை உள்ளது.
அதனால், இந்த ஆண்டு பிளஸ் 1ல் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுவதில், கடும் சிரமப்படுவர். மேலும், மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு, ஜே.இ.இ., தேர்வு போன்றவற்றையும் எழுத தெரியாமல் தவிக்க நேரிடும். எனவே, பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை, உடனே வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வழக்கு தொடர முடிவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன் கூறுகையில், ‛'10ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் செல்ல, மதிப்பெண் தேவை. எனவே, பள்ளி அளவிலான தேர்வாவது நடத்தி, மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார். 'தேர்வு ரத்து முடிவை, அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயற்சிக்கப்படும்' என, பள்ளி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.