தமிழகத்தில் தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கென ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஜூலைக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், கலந்தாய்வு நடத்தப்படவில்லை. தற்போது, ெதாடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வரும் 27, 28ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்காக மட்டும் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில செயலாளர் முனியசாமி மாவட்ட தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் திடீரென அடுத்தடுத்து பதவி உயர்வு கலந்தாய்வுக்கு அறிவிப்பு வெளியாகி வருகிறது. இவற்றில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
குறிப்பாக, பணியிட மாறுதல் வழங்காமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது ஏற்புடையது அல்ல. பல ஆண்டுகளாக சொந்த மாவட்டம், சொந்த ஒன்றியம் செல்ல வேண்டும் என்பதற்காக, எந்தவித மாறுதலிலும் கலந்து கொள்ளாமல், பணிமூப்புடன் காத்திருந்தவர்களின் விருப்பமான இடத்திற்கு, பதவிஉயர்வு மூலம் வருபவர்கள் சென்றுவிட்டால், அவர்களின் நீண்டநாள் காத்திருப்பு வீணாகி விடும்.
சார்நிலை விதிகளுக்கு முரணாக நடத்தப்படும் இந்த பதவி உயர்வு கலந்தாய்வை எதிர்த்து, ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் மேலும் பல சிக்கல்கள் உருவாகும். எனவே, நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, பணிமாறுதல் வழங்கிவிட்டு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.