கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு மிகுந்த பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா நோய் தொற்று தாக்குதல் பரவத்தொடங்கியது. தற்போது கொரோனா பரவத்தொடங்கி ஒரு ஆண்டுகள் ஆகின்றது. கொரோனா நோய் தொற்று காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து முழு ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல், ஊரடங்கு உள்ளிட்டவற்றின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றில் இருந்து நாடு மீண்டு வரத்தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. இதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினர் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது. சிறப்பு பொருளாதார சலுகை, வருமான வரியில் தளர்வுகள் இருக்குமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அனைத்து பொருளாதார பிரச்னைகளுக்கும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக முடங்கிய தொழில்துறையை மீட்கும் வகையிலான அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக இலவச தடுப்பு மருந்ைத அரசு வழங்கி வருகின்றது. 1.5 லட்சம் உயிர்களை கொரோனா பலிகொண்ட நிலையில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக அதிகமான நிதி ஒதுக்கீடும் அவசியமாகி உள்ளது. கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்ட இழப்புக்களில் இருந்து மீள்வது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது உள்ளிட்டவை அரசின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்களில் சிலவாகும்.
எனவே பட்ஜெட்டில் செலவு, வருவாய், நிதிப்பற்றாக்குறை, சுகாதாரம், ஜிடிபி உள்ளிட்ட விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதால் அது தொடர்பான அறிவிப்புக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா செஸ்: வரி வருவாயை உயர்த்தும் வகையில் செஸ் பெயரில் புதிய வரி அல்லது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்த புதிய வரி அல்லது கூடுதல் வரி விதிக்கப்படலாம்.
காகிதமில்லா பட்ஜெட்
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது. வழக்கமாக பெட்டியினுள் வைத்து பட்ஜெட் உரை தாள்கள் கொண்டுவரப்படும். கடந்த முறை இந்த முறையை மாற்றி சிவப்பு நிற துணி கோப்பில் நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார். இந்த தடவை முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கின்றார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுகின்றது. காகிதத்தில் அச்சிடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
* பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது ஒரு இடைக்கால பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இது.
* நாட்டின் இரண்டாவது பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட்.
* கொரோனா பாதிப்பிலும் விவசாய துறை மட்டும் 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. அதனை சார்ந்த துறைகள் வளர்ச்சியடைந்தது. இதன் காரணமாக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான சிறப்பு சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
* வருமான வரி சலுகை?
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புக்கள் நடுத்தர மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்ப்பார்கள். இந்த ஆண்டும் வருமான வரி தொடர்பான சலுகை அறிவிப்புக்கள் இடம்பெறுமா என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரியை கணக்கிடுவதில் மாற்றங்கள் கொண்டு வந்தபோதிலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்து வருகின்றது. இது இந்த நிதியாண்டில் ரூ.5லட்சமாக உயர்த்தப்படுமா என்றும், நிலையான கழிவானது ரூ.50ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சமாக அதிகரிக்கப்படுமா எனவும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
* 2 நாள் முன்கூட்டி முடிக்க திட்டம்
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கி வருகிற 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு நாட்கள் முன்னதாகவே 13ம் தேதியே முடிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.