மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் - Asiriyar.Net

Thursday, July 2, 2026

மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள்




தமிழகத்தில், 2,482 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதால், அப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில், 31ஆயிரத்து, 343 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 16 லட்சத்து, 99 ஆயிரத்து, 715 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கொரோனா பரவல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி, பல பெற்றோருக்கு, தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாற்ற நிர்பந்தம் ஏற்பட்டது.


கொரோனா முடிந்த பின், மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுத்து வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது.


இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த மருத்துவ, தொழில் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பெற மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் போன்ற சலுகை வழங்கப்பட்டன. இருப்பினும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.


நடப்பு ஆண்டில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்பதால், 48 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்பட இதுவரை மொத்தம், 255 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மேலும், 1 முதல் 9 எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் ஒன்றை இலக்க பள்ளிகள், 2,482 இயங்கி வருகின்றன. இதில், திருப்பூர் மாவட்டத்தில், 147 பள்ளிகள், சிவகங்கையில், 146, ராமநாதபுரத்தில், 139, திண்டுக்கலில், 131, ஈரோட்டில், 128 கோவையில் 80, நீலகிரியில் 44 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இந்த ஒற்றை இலக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அல்லது ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். சில ஆண்டுகளில், இந்த பள்ளிகளில் சேர்க்கை பூஜ்ஜியம் ஏற்பட்டால் மூடும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட போது, கிராமங்களிலிருந்து நகரத்திற்கு மக்கள் இடப்பெயர்ச்சி காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என, பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்தது. பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், பள்ளிகள் மூடப்படாமல் தடுக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




No comments:

Post a Comment

Post Top Ad