ஆசிரியர்களுக்கு TET தேர்வு ரத்து - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமியற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Tuesday, July 21, 2026

ஆசிரியர்களுக்கு TET தேர்வு ரத்து - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமியற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை




2011ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதுவதிலிருந்து, அரசாணைக்கு முன்பு பணியில் சேர்ந்த பழைய ஆசிரியர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011&ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடைபெற்றது. இந்த முக்கியமான கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் த. தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நலன்கள் மற்றும் பணிப் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் த. தியாகராஜன் கூறியதாவது, " தேசிய அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) கட்டாயமாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

எனவே, தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பணியில் சேர்ந்த பழைய ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இதிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காகத் தமிழக அரசு மத்திய அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்தை முறைப்படி அணுகி இந்தத் தீர்ப்பு குறித்த முழுமையான விளக்கத்தையும் அரசு பெற வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள் தங்களின் பணியைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் தகுதித் தேர்விற்குத் தயாராவதற்காக நீண்ட விடுமுறை எடுத்துப் படிக்கும் சூழல் உருவாகும் என்றார். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த பொறுப்புணர்வோடு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்த தவெக, தற்போது அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad