TET - தேர்வுகள் எப்போதும் வன்முறைக் கருவிதான் - Asiriyar.Net

Tuesday, July 21, 2026

TET - தேர்வுகள் எப்போதும் வன்முறைக் கருவிதான்




_✍🏼 மு.சிவகுருநாதன்

       விடுதலைக்குப் பின் இந்தியாவில்  கல்வியில் பல்வேறு கொள்கைகள் உத்திகள் வகுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் கல்வி மற்றும் கலைத்திட்டம், கற்றல் முறைகள், தேர்வுச் சீர்திருத்தம் போன்றவற்றை வலியுறுத்துவதாக அமைந்தன. மனப்பாடத் தேர்வுகளை ஒழிப்பதே தேர்வுச் சீர்திருத்தங்களின் முதன்மை அம்சமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வங்கி முறைக் கல்வி மனப்பாடத் திறனை மட்டும் சோதிக்கும் தேர்வுமுறைகளையே கைக்கொள்கிறது. தகுதி, திறமை என்பதெல்லாம் வெறும் மனப்பாடத்திறனில் மட்டும் இருப்பதாக நம்பும் மடைமை இங்கு குருகுலப் பாணியில் வளர்க்கப்பட்டுள்ளது.

          இந்த வடிகட்டும் தேர்வும் முறைக்குப் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆதரவாளர்களே. இதில் அவர்களை மட்டும் குற்றஞ்சொல்வதில் பலனில்லை. நமது கல்வியமைப்பு இவ்வாறாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. நீட் (NEET), டெட் (TET) உள்ளிட்ட எந்தத் தேர்வுகளும் அறிவைச் சோதிக்கின்றன என்பதற்கு அறிவியற்பூர்வமானஆதாரங்கள் இல்லை. அப்படியான பாவனை இங்கு பரப்பப்படுகிறது. இது முழுதும் கற்பிதமே. தகுதி, திறமை என்ற சொல்லாடல்களின் பின்புலம் ஆராயப்பட வேண்டியது. சுழிய மதிப்பெண் பெற்றாலும் நீட் எழுதுவதே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி எனும்போது உண்மை வெளிப்படவே செய்கிறது.

        1-8 வகுப்பு ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு நடத்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 வலியுறுத்துகிறது. ஏப்ரல் 01, 2010 இலிருந்து அமலான இச்சட்டத்தில் இயற்கை நீதிக்கு முரணாக முன்தேதியிட்டு நடைமுறைப் படுத்துகிறது.  தேர்வுகளில் மாணவர்களுக்குக் கருணை காட்டாத ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கருணை காட்ட விரும்பவில்லை என்பது அவர்களது தீர்ப்பில் எதிரொளித்தது. பணியில் நீட்டிக்க ஓராண்டு மட்டும் அவகாசம் அளிக்கப்பட்டது. 2028க்குள் தகுதி பெற்றுவிட காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தேர்வுகள் குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறையாகும். அந்த வன்முறை இன்று பரவலாக்கப்பட்டுள்ளது.

       எனவே 55 வயது நிரம்பிய அனைவரும் பணியில் நீடிக்க டெட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 55-60 வயதினர் பதவி உயர்வு பெற விரும்பினால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். 1990களின் தொடக்கத்தில் நேரடியாகவோ ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமோ நியமிக்கப்பட்ட 30 ஆண்டுகாலப் பணிக்காலத்தைக் கடந்தவர்களும் இன்று தகுதித்தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேறு துறைகளில் இவ்வாறான நிலை என்றால் பெரும் கிளர்ச்சி வெடித்திருக்கும். இதை ஒருவகையான ஆட்குறைப்பு நடவடிக்கை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

     என்னதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றாலும் தகுதித் தேர்வு நடைமுறைகள், தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றை மாநில அரசே முடிவு செய்கிறது.   மாநில அரசின் கருணை தேர்ச்சி மதிப்பெண்களை 60% லிருந்து 50% ஆக குறைத்ததோடு நின்றுவிட்டது. முற்பட்ட வகுப்பினருக்கு 60% எனவும் இதர பிற்பட்ட வகுப்பாருக்கு 50% ஆகவும் அட்டவணை மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கு 45% எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல்தாள்  என்பது இடைநிலை ஆசிரியர்களான 1முதல் 5 முடிய உள்ள ஆசிரியர்களுக்கானது. இவர்கள் பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற தாள் இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும். 

          முற்பட்ட வகுப்பினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என 3 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதித்தேர்வு முடிவுகளை ஜூலை 24 வரை வெளியிடத் தடையாணை பெற்றுள்ளனர். தமிழக அரசும் இதுகுறித்து பரிசீலிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டிய நிலையில் வழக்கிற்காக ஒரு தரப்பாக முடிவு எடுக்க வேண்டியதில்லை.

     நடுநிலை/உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தாள் இரண்டை எழுதுவார்கள். 9-10 ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு தேவையில்லை என்றாலும் தமிழ்நாட்டில் உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளை ஒரே பட்டதாரி ஆசிரியர்களே கற்பிப்பதால் யாரும் தகுதித்தேர்விலிருந்து தப்பிக்க இயலாது.

      தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளை ஒப்பீடும்போது தேர்ச்சி விழுக்காடு மிகவும் குறைவாக இருப்பது விளங்கும். லட்சக் கணக்கில் தேர்வர்கள் இருப்பதால் அவர்களில் சில ஆயிரம் பேரை மட்டும் தேர்வு செய்ய இந்த வடிகட்டும் முறை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வசதியாக உள்ளது.      ஆசிரியர்களுக்குச் சிறப்பு தகுதித் தேர்வு என்பதால் வினாத்தாள் சற்று எளிமையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இரு தேர்வு வினாத்தாள்களையும் பார்த்த பிறகு கெட்டித்தட்டிப் போன கல்வித்துறையின் குரூர முகத்தை ஆசிரியர்களால் காண முடிந்திருக்கும்.

       ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து பணியில் தொடரக்கூடாது என்ற ஒற்றை நோக்கில் வினாத்தாள்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. இதை சிறப்புத்தேர்வு என்று அழைக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆசிரியர் பணிக்குத் தயாராக இருக்கும் அனைவரும் எழுதும் பொதுவான தேர்வாக நடத்தியிருக்கலாம்.

       முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு பணிச்சான்று (Service Certificate) வழங்க 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கேட்கப்பட்டன. தேர்வர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குற்றயுணர்ச்சியை விதைப்பது கல்வித்துறைக்கு அழகல்ல.

      தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான தேர்வில் பாடத்திட்டம் எதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதே விவாதத்திற்குரியது. 1-5 வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பதால் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy), தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் தலா 30 மதிபெண்கள் என 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

       குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு தலா 30 மதிப்பெண்களும் கணித, அறிவியல் பாடங்களில் 60 மதிப்பெண்களையும் கணித, அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த 90 உடன் சமூக அறிவியலில் 60 மதிப்பெண்களை சமூக அறிவியல் அதாவது வரலாறு, புவியியல் பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர்.

      தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்கள் சமூக அறிவியல் பாடத்தின் 60 வினாக்களுக்குத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களது பாடங்களைவிட அதிக எண்ணிக்கையிலான பிற பாடக் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. மொழியாசிரியர்கள் மீது கூடுதல் சுமை திணிக்கப்பட்டுள்ளது. தங்கள் கற்பிக்கும் பாட்த்தைவிட பிற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டியுள்ளது. இதுவும் இவர்கள் சொல்லும் தகுதியை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

        2004க்கு முன்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் தங்களது பாடத்துடன் ஆங்கிலப் பாடத்தையும் கற்பித்தனர். 2004 இல் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட உடன் இந்நிலை முடிவுக்கு வந்தது. இப்போது ஒரு ஆசிரியர் இரு பாடங்களைக் கற்பிக்கும் நிலை இல்லை. கற்பிக்காத இரு பாடத்தில் அந்த ஆசிரியரின் தகுதியை அளவிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி முக்கியமானது.  இதைக்கூட கவனிக்காமல் ஒரு துறை பொறுப்பின்றி செயல்படக் கூடாது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் ஆசிரியர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணமும் இதில் வெளிப்படக் காணலாம். 

      முதல் தாளுக்கு 1-5 வகுப்புகளின் பாடங்களும் இரண்டாம் தாளுக்கு 6-8 வகுப்புகளின் பாடங்களும் பாடத்திட்டமாக இருந்தாலும் +2 முடிய உள்ள பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. தாள் ஒன்றுக்கு, “The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based on the topics of the prescribed syllabus of the State for Classes I - V, but the standard, as well as linkages will be up to the Secondary Stage. என்றும், தாள் இரண்டுக்கு, “The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI-VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage”,என்றும் காரணம் சொல்வதும் ஒருவகையான வன்முறையே.

      தமிழ்நாட்டில் இதுவரை (2012-2022) நடைபெற்ற டெட்  தேர்வுகளில் முதல் தாள் தேர்ச்சி விழுக்காடு அதிகபட்சமாக  14.03% (2022) என்ற அளவிலும்  இரண்டாம் தாள் தேர்ச்சி அதிகபட்சமாக 10.52% (2013) என்றிருப்பதை புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பு இரண்டால் தாளில் மட்டுமே 20.14% விழுக்காடு தேர்ச்சி பெறும் சூழல் இருந்தது. 2025 இல் தேர்வு முடிந்த பிறகு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கியதன் காரணமாக தேர்ச்சி விழுக்காடு 49.20% (தாள்: I) 31.50%  (தாள்: II) அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது நடந்து முடிந்த தேர்விலும் 40% என தளர்வும் வெயிட்டேஜ்–ம் வழங்கப்பட்டாலன்றி தேர்ச்சி விழுக்காடு மிககுறைவாகவே இருக்கும். ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராகும் நிலை கல்விப்பணிகளில் சுணக்கத்தை உண்டாக்கும் என்பதையும் கணக்கில் கொள்வது நல்லது.

       நீட் தேர்வுக் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அதைவிட கொடிய கொடுமைகளை அரங்கேற்றுவது மிக மோசமானதாகும். கைக்குட்டை, குடிநீர் எடுத்துச் செல்லக்கூடாது.  பெல்ட், செருப்பு, ஷூ அணியக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது நியாயமற்றது. இனி வருங்காலங்களில் உள்ளாடைகள் அணியக் கூடாது என்றோ, ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நோயாளியை அனுப்புவது போல் வேறு உடை அணிவித்து தேர்வர்களை தேர்வறைக்குள் அனுமதிப்பார்கள் போலும்! சிசிடிவி கேமராக்கள் பொருத்தி வைத்துக் கொண்டு இவ்வளவு கெடுபிடிகள் செய்வது ஏன்? தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கிறோம் என்று பெயரில் தேர்வர்களை அவர்கள் குழந்தைகளாயினும்  பெரியவர்களாயினும்  அவமானப்படுத்தும் கொடுமை ஒழிய வேண்டும்.  மனித உரிமைகளும் மாண்பும் காக்கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad