தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஊழியர்கள் - நடப்பது என்ன? - Asiriyar.Net

Thursday, April 11, 2024

தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஊழியர்கள் - நடப்பது என்ன?

 



தேர்தல் பணிகளை புறக்கணிக்க பொய்யான காரணங்களை முன்வைத்து, பல்வேறு துறை உயரதிகாரிகளிடம் இருந்து சிபாரிகளை பெற பல அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.


தேர்தல் நேரங்களில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் தேர்தல் பறக்கும் படை குழுக்கள், தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு மையத்தில் பணி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படு கின்றனர். தற்போதைய மக்களவைத் தேர்தல் பணியில் கோவை மாவட்டத்தில் 15,860 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.




அதே நேரம், தேர்தல் பணியை தவிர்ப்பதற்காக பல ஊழியர்கள் விருப்பமின்மை கடிதம் கொடுத்து, பணியில் இருந்து விலக்கு பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப சூழ்நிலை, உடல் நலக்குறைவு உள்ளிட்ட உண்மையான காரணங்கள் ஒரு புறம் இருந்தாலும், தொலை தூரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பணி ஒதுக்குவது, இரவு தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறைவாக இருப்பது, மிகவும் கவனமுடன் பணியாற்றினாலும் அரசியல் கட்சிகளின் புகாரினால் நடவடிக்கைக்கு உள்ளாவது உள்ளிட்ட காரணங்களால் பலர் தேர்தல் பணியை புறக்கணிப்பது தெரியவந்துள்ளது.


சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “அரசு பணி என்பது 24 மணி நேரம் செயல்படும் தன்மை கொண்டதாகும். பணியாற்றுவதற்கு முன் அவர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது.


எனவே, பொய்யான காரணங்களை கூறி தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு பெறும் அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், ஊழியர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவும் அரசு முன்வர வேண்டும்” என்றனர்.


கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் கேட்டபோது, “கர்ப்பிணிகள், கைக் குழந்தைகள் உள்ள பெண் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போர் ஆகியோருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


மேலும், இருதய நோய் உள்ளிட்ட தீவிர உடல் நல பாதிப்பு உள்ளவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.


தேர்தல் பணிக்கு விலக்கு பெற மருத்துவ ரீதியான காரணங்களை தெரிவிக்கும் அரசு ஊழியர்களிடம் உண்மைத் தன்மையை கண்டறிய சுகாதாரத் துறை உயரதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தவிர, கல்வித் துறை போன்றவற்றில் தேர்வு பணி உள்ளிட்ட சில காரணங்களால் அத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பணியை மாற்றிக்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.



Post Top Ad