பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை - ஆசிரியர்கள் நடத்தும் பாடம் மனதில் பதிய வைக்க புதிய முயற்சி - Asiriyar.Net

Thursday, December 8, 2022

பள்ளிகளில் அதிரடி நடவடிக்கை - ஆசிரியர்கள் நடத்தும் பாடம் மனதில் பதிய வைக்க புதிய முயற்சி

 



சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உலக தரத்தில் மாணவர்களுக்கு கல்வி வழங்க அதிரடி நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. மேலும், ஆசிரியர்கள் நடத்தம் பாடங்கள் மாணவர்களின் மனதில் எளிதில் பதிய வைக்கவும் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை உலக தரத்தில் நவீன முறையில் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


 அதன்படி, முதல்கட்டமாக சிட்டிஸ் மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.145 கோடி செலவில் 50 பள்ளிகளை மார்டன் பள்ளிகளாக மாற்றும் பணிகள் நடந்தன. இதேபோன்று, மாநகராட்சி பள்ளிகள் அனைத்தையும் தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


தற்போது செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.50 லட்சம் பேர் வரை படிக்கும் வசதிகள் உள்ளது. அதேநேரம் தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் ஆர்வம் காரணமாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆட்சி காலத்தில் மாணவர் சேர்க்கை கடந்த 2019ம் ஆண்டு வரை 90 ஆயிரம் என்ற அளவில்தான் இருந்தது.


 இச்சூழ்நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, உலகத் தரத்தில் சென்ைன மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 


எனவே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளின் கட்டமைப்பை நவீனப்படுத்தவும், தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. 


பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்த்தப்பட்டால்தான் முதல்வரின் நோக்கம் நிறைவேறும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது முடுக்கிவிட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி தரத்தை  உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.


அதன்படி, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்தல், மாணவ, மாணவியரின் ஆங்கிலப் புலமையை அதிகப்படுத்துதல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் பாடவாரியாக வாராந்திர தேர்வு நடத்தி கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்துதல், கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பாடப்பிரிவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களுக்கு  சிறப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அன்றன்று நடத்தும் பாடங்கள் அவர்கள் மனதில் நன்றாக பதியும் வகையில் நாள்தோறும் வீட்டு பாடங்கள் வழங்கப்பட்டு ஆசிரியர்களால் திருத்தம் செய்து கண்காணிக்கும் புதிய அறிவுறுத்தல்களை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* பாட வாரியாக வாராந்திர தேர்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆலோசனையின்படி மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பானது தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 


மேலும், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் திறனுக்கேற்றவாறு பாடவாரியாக வாராந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.


கற்றலில் அடைவுத்திறன் குறைவான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எந்தெந்த பாடப்பிரிவுகளில் உள்ளனர் எனக் கண்டறியப்படுகிறது. அவர்களுக்கு கற்றலில் அடைவுத்திறன் அடையும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் அன்றன்று நடத்தும் பாடங்களை மாணவர்கள் மனதில் நன்றாகப் பதியச் செய்யும் வகையில் நாள்தோறும் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டு, மறுநாள் ஆசிரியர்களால் திருத்தம் செய்யப்படுகிறது. 


வீட்டுப் பாடத்தில் மாணவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டி அவர்களின் கற்கும் திறன் மேம்படுத்திடும் வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது. இதுபோன்ற மாநகராட்சியின் அறிவுறுத்தல்களால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

Post Top Ad