``ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி... ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்... பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள், பலர் இறந்தும்விட்டார்கள்... இருப்பவர்களுக்காவது சம ஊதியம் கேட்டுப் போராடுகிறோம்.”
இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் இருக்கும் ஊதிய வேறுபாடுகளைச் சரிசெய்யக் கோரி, டிசம்பர் 27 முதல் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நேற்றைய தினம், தொடக்கக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.
பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து, அந்தச் சங்கத்தைச் சேர்ந்த ராபர்ட் செய்தியாளர்களைச் சந்தித்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், "பேச்சுவார்த்தை நடத்திய முதன்மைச் செயலாளர், அரசு முடிவெடுக்க கால அவகாசத்தைக் கோரினார். நாங்கள் `எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பொறுத்திருக்கத் தயார். ஆனால், எங்களுக்கு ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம்’ என்றோம்.
இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தில், நேரில் பங்கு கொண்டு, எங்களுடன் தோளோடு தோளாக நின்றார் முதல்வர் மு.க ஸ்டாலின். அவர் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். இத்தனை ஆண்டுக்காலமாக நாங்கள் இழந்த தொகையைக் கேட்கவில்லை. இனி வரும் காலத்திலாவது, சம ஊதியத்தை வழங்குமாறு கேட்கிறோம். இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபெற்ற இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஞானசேகரனிடம் பேசினோம். அவர் பேசுவையில், "31.5.2009-க்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அப்போது 11,170 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுவந்த நிலையில், அதன் பின்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூபாய் 8,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது.
அன்றைய தேதிக்கு 3,170 ரூபாய் எங்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்பட்டது. இன்றைய தேதிக்கு, ஊதியத்தில் மாதம்தோறும் 20,000 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி... ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்... இந்த 10 ஆண்டுகளில், பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள், பலர் இறந்தும்விட்டார்கள்... இருப்பவர்களுக்காவது சம ஊதியம் கேட்டுப் போராடுகிறோம். முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஆனால் முதல்வரை நெருங்க முடியவில்லை. இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில், ரூ.30,000 கோடிக்கு மேல் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு மாதம் 20 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும். இதைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் எடுத்துரைத்தோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார் அமைச்சர். முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நல்ல முடிவு எட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.
4-வது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில், பங்கு பெற்ற 60-க்கும் மேலான ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, சுமுக முடிவை எடுக்க வேண்டும் என்பதே போராடும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
No comments:
Post a Comment