அரையாண்டு தேர்வில் ஆன்லைன் வினாத்தாள்; சோதனை முயற்சியாக 428 பள்ளிகளில் அமல் - Asiriyar.Net

Wednesday, December 21, 2022

அரையாண்டு தேர்வில் ஆன்லைன் வினாத்தாள்; சோதனை முயற்சியாக 428 பள்ளிகளில் அமல்

 
தமிழகத்தில் சோதனை முயற்சியாக, 428 அரசு பள்ளிகளில், 'ஆன்லைன்' வழியில் வினாத்தாள் வழங்கி, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களின் நிர்வாக முறைகளில், கணினி வழியை புகுத்த, கமிஷனரகம் முயற்சித்து வருகிறது.அரசு பள்ளிகளுக்கான தேர்வு வினாத்தாள்களை, வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வு போல, ஆன்லைன் வழியில் அனுப்பும் திட்டத்தை, பள்ளிக் கல்வி துறை பரிசோதனை செய்துள்ளது.


முதற்கட்டமாக, நடப்பு கல்வி ஆண்டில், 10 மாவட்டங்களில் தலா இரண்டு பள்ளிகள் வீதம், 20 பள்ளிகளில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள், ஆன்லைன் வழியில் அனுப்பி பரிசோதிக்கப்பட்டது.


கோவை மாவட்டத்தில், 232 நடுநிலை பள்ளிகள், 83 உயர்நிலை பள்ளிகள், 113 மேல்நிலை பள்ளிகள் என, 428 பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியே வினாத்தாள் அனுப்பி, அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும், தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆன்லைன் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்டு, அச்செடுத்து, மாணவர்களுக்கு தேர்வை நடத்தும்படி அறிவிக்கப்பட்டது.


இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ஆன்லைன் வகை வினாத்தாளை, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு முன் கூட்டியே வழங்கப்பட்டு, 'லீக்' ஆவது தடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சோதனை முறையில் நடத்தப்படும் இந்த தேர்வில், வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு, சம்பந்தப்பட்ட இணையதளத்தின், கூடுதல் செயல்திறனை தாங்கும் வகையில், 'சர்வர்' இணைப்பு பெற்றிருக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.


Post Top Ad