மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 குறள்களை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்த்து முழுமையாக பாடம் நடத்தவும், இறுதித் தேர்வுகளில் கட்டாயம் வினாக்கள் இடம் பெறவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, ‘‘நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி, அறத்துப்பால் மற்றும் பொருட்பாலைக் கொண்ட 108 அதிகாரங்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. வரும் 2022 - 23 முதல் அமலில் இருக்கும். திருக்குறளில் இருந்து மட்டும் 15 முதல் 20 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்படும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நன்னெறி மற்றும் ஒழுக்கத்தை திருக்குறள் போதிக்கிறது. பொதுவாழ்வு மற்றும் தனிப்பட்ட வகையில் பொதுமக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. ஜாதி, மதம், கலாச்சாரம், தேசியம் உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல், வாழ்க்கைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இது பைபிள், குர்ஆன் தவிர்த்து உலகில் புனிதநூலாக ஏற்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகம் பல வகையான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வாக திருக்குறள் அமைந்துள்ளது. தற்போதைய இக்கட்டான சூழலில், ஒவ்வொரு சாமானியருக்குமானதை திருக்குறள் போதிக்கிறது. இது இங்குள்ளதை விட மற்ற நாடுகளில் அதிகமாக பின்பற்றப்படுகிறது.
திருக்குறள் போதனை என்பது காலத்தின் கட்டாயம். மாணவர்களுக்கு திருக்குறளை போதிப்பதன் மூலம் அதன் விழுமியங்களை உருவாக்க முடியும். சகிப்புத்தன்மையும், இணக்கமானதுமான சமூகத்தை உருவாக்க முடியும். திருக்குறள் விலைமதிப்பற்ற அறிவு சொத்தாகும். அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான நெறிமுறைகளை தருகிறது. பல மொழிகளில், பல பல்கலைக்கழகங்களில் பாடமாக நடத்தப்படுகிறது.
இதை நமது பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களில் சேர்ப்பதே சரியானதாகும். சமூகத்திற்கான ஒழுங்கை மேம்படுத்துவது அரசின் கடமையாகும். இளைய தலைமுறையினரை நேர்மையான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். 108 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், 15 முதல் 20 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை 3 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment