மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு. - Asiriyar.Net

Tuesday, February 2, 2021

மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு.

 






ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் ஆகும்.



இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்துப் படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



அதேபோல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



ஆகவே, மாணாக்கர்களும் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களை 07.02.2021-க்குள் கல்வி நிலையத்தில் தவறாது சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் மேற்கண்டவாறு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைப் பெற்று 13.02.2021-க்குள் இணையதள வழி விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நிதியாண்டு முடிய இன்னும் குறுகிய காலமே உள்ளதால், குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து மாணாக்கர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும் மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்விதத் தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது''.


இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad