பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை எதிர்த்து, மார்ச், 15, 16ம் தேதிகளில், வேலை நிறுத்தம் செய்ய, அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மத்திய பட்ஜெட்டில், ஐ.டி.பி.ஐ., வங்கி முழுதும் தனியார் வங்கியாக மாற்றப்படும்; இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்.காப்பீட்டுத் துறையில், 74 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி; எல்.ஐ.சி., பங்குகள் விற்பனை உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச், 15, 16ல், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய, அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதன்படி, இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடக்கும். அதன் பின், அடுத்த கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.