ஆவின் பாலகங்கள் மற்றும் டீக்கடைகளில், சூடான பாத்திரங்களின் மீது பால் பாக்கெட்டுகளை வைத்து சூடாக்கும் நிலை தொடர்கிறது. இக்கடைகளில் டீக்குடிப்பவர்களுக்கு, இதனால் உடல் நலன் கெடும் என்பதால், இவற்றை காணும் பொதுமக்கள் புகார் அளிக்க, உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
டீக்கடை, பேக்கரிகளில் கொதிக்கும் பால் பாத்திர மூடியின் மீது, பால் பாக்கெட்டுகளை வைத்திருப்பதை, அனைவரும் பார்த்திருப்போம். இவ்வாறு, சூடான பாத்திரத்தின் மீது பால் பாக்கெட்டுகள் வைப்பதால், அவை நெகிழ்ந்து பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக மாறுகிறது.இப்பால் அல்லது டீயை குடித்தால், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறைக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், நேற்று அதிகாரிகள் அவிநாசி சாலையிலுள்ள, பத்துக்கும் மேற்பட்ட கடைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுகளின் போது, சூடான பாத்திரத்தின் மீது பால் பாக்கெட் வைத்திருந்த கடைகளுக்கு, உடனடியாக எச்சரிக்கை விடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நாளிதழில் தின்பண்டங்களை மடித்துக்கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:சூடான பாத்திரங்களின் மீது, பால் பாக்கெட் வைப்பதால், பிளாஸ்டிக் உருகி பாலுடன் கலக்கும் வாய்ப்பு அதிகம். இதனால், பொதுமக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவர். ஆவின் பாலகங்கள், டீக்கடை, பேக்கரிகளில் இதுபோன்று செய்வது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இனி பேக்கரிகளில், இது போன்று பால் பாக்கெட்டுகளை சூடான பாத்திரங்களின் மீது வைத்திருப்பதை பொதுமக்கள் காண நேர்தால், உடனடியாக புகார் அளிக்கலாம். விதிமீறல் கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.