கின்னஸ் சாதனை _ பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்கள்! - Asiriyar.Net

Monday, February 8, 2021

கின்னஸ் சாதனை _ பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்கள்!

 




ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய, 100 சாட்டிலைட்களை பலுானில் வானில் பறக்க விட்டு சாதனை படைத்தனர்.



அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, இந்திய விண்வெளி மண்டலம், மார்ட்டின் தொண்டு நிறுவனம் இணைந்து 'அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சேலஞ்ச் 2021' எனும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 8 மாநில அரசு, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் சென்னையில், 100 சாட்டிலைட்களை உருவாக்கினர்.





ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில் இந்த செயற்கைக்கோள்கள் பறக்கவிடப்பட்டன. காணொலி மூலம் தெலுங்கானா கவர்னர் தமிழிசை, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்தி பேசினர். தமிழிசை பேசும்போது, ''இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் உலகிற்கு பறைசாற்றி உள்ளனர். விண்ணில் இருந்தபடி அப்துல்கலாம் இவர்களுக்கு ஆசி வழங்கியிருப்பார்,'' என்றார்.



பின் ஹீலியம் நிரப்பிய இரு பலுானில் தலா, 50 சேட்டிலைட்கள் அடங்கிய இரு பெட்டியுடன் - 1.670 கிலோ, 2.380 கிலோ வானில் பறக்க விட்டனர். வானில், 38 கி.மீ.,துாரம் பறந்ததும் இரு பலுான்கள் வெடித்தன.பாராசூட் மூலம் செயற்கைகோள்கள் வானில் பறந்தபடி விவசாயம், கடலில் நிலவும் தட்பவெப்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படங்கள், தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பின.எட்டு மணி நேர பயணத்திற்கு பின் அவை கோவில்பட்டி பகுதியில் மாலை, 6:00 மணிக்குள் தரையிறங்கின.


விழாவில் பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, அப்துல்கலாமின் பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத், மார்ட்டின் தொண்டு நிறுவன நிர்வாகி லீமாரோஸ், ராமேஸ்வரம் தீவு விளையாட்டு கழக தலைவர் பழனிச்சாமி, பள்ளி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.


விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, கூறுகையில், ''அரசு பள்ளி தமிழ் வழி மாணவர்கள் இச்சாதனை நிகழ்த்தியது பாராட்டுக்குரியது. நம்நாடு கல்வியில், 70 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. ''சில ஆண்டுகளில் தன்னிறைவு பெறும். நம்நாட்டில், 70 கோடி இளைஞர்கள் உள்ளதே நமக்கு கிடைத்த பொக்கிஷம். ககன்யான் திட்டம், 2022ல் செயல்படுத்தப்படும்,'' என்றார்.


டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியோர் இணைந்து இராமேஸ்வரத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது. 


மாணவர்கள் மத்தியில் ஒரு செயற்கைகோள் தயாரிப்பு,  விண்வெளித்துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆயிரம் மாணவர்களை கொண்டு 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. 



முன்னதாக இவர்களுக்கு செயற்கைக்கோள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டதோடு ஒருநாள் நேரடி செயல்வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த செயற்கை கோள்கள் உதவியுடன் பூமியின் தட்ப வெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. 


இந்த குழுவில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் செய்யது அகமது சமீர் என்ற மாணவன் தயாரித்த செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. அம்மாணவனுக்கு கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு,ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு,  அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என  ஐந்து உலக  சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 


உலக சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனுக்கும்,  வழிகாட்டிய முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் முகைதீன் அப்துல் காதர், தமிழாசிரியர் செய்யது இப்ராகிம் ஆகியோருக்கும் முகம்மதியா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழு  சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

Post Top Ad