அவகாசம் வழங்க வாய்ப்பில்லை: பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் கட்டாயம். - Asiriyar.Net

Tuesday, February 9, 2021

அவகாசம் வழங்க வாய்ப்பில்லை: பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் கட்டாயம்.

 




பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விலக்கு அளிக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுங்க கட்டணங்களை நேரடியாக செலுத்துவதை  தவிர்க்க மத்திய அரசு, பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு விடாப்பிடியாக இருந்தது. சுங்க கட்டணம் வசூலிப்பதில்  வெளிப்படைத்தன்மை, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்பதால் ஏற்படும் எரிபொருள் பயன்பாடு, நேரவிரயம், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஸ்டேக் மூலம்  கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்து. 



உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு முயன்றதால் வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் படிப்படியாக இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில், 2020 டிசம்பருக்குள் நாடு முழுவதும்  பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது கட்டாயம் என மத்திய அரசு இறுத்திக்கெடு விதித்திருந்தது. இதனை ஜனவரி வரை நீட்டித்த மத்திய அரசு, மீண்டும் நீட்டித்து பிப்ரவரி 15 ஆம் தேதி கடைசி காலக்கெடுவாக அறிவித்துள்ளது. இந்த  தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.




இதுகுறித்து மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பிப்ரவரி 15 பிறகு கட்டாயம் அமல்படுத்தப்படும்.  இந்த முறை, மீண்டும் அவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். 2020 டிசம்பர் வரை பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறை 73 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும், மாதம் 2,088 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக  வசூலாகுவதாகவும் நிதின்கட்கரி கூறியுள்ளார். இதனால், பிப்வரி 15 ஆம் தேதிக்குப்பிறகு பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தாதவர்கள் இரு மடங்கு தொகையை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.




மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், புதிய வாகனங்கள் அனைத்துக்கும்  பாஸ்டேக் கட்டாயமாகும் என்றும், இதனால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்னும் எளிமையாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 


பாஸ்டேக் பதிவு செய்தப்பின், அதன் QR code -ஐ வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டப்பட  வேண்டும். சுங்கச்சாவடிகளில் இருக்கும் ஆட்டோமேடிக் ஸ்கேனர், இந்த QR code -ஐ ஸ்கேன் செய்து, அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணத்தை வசூலித்துக்கொள்ளும். இதனால், வாகன ஓட்டிகளுக்கும்,  சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்களுக்கும் இடையே சில்லறை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.


Post Top Ad