வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட ஒரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 5 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி, எந்த ஒரு அரசு ஊழியரும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது.
இது தொடர்பாக, அனைத்து அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்ததை தொடர்ந்து, புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குனர், அந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், மேலும் 5 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அரசு துறை ஊழியர்கள், தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், அல்லது எதிராகவும் செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment