தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு 6,000 வகுப்பறைகள் - Asiriyar.Net

Friday, December 9, 2022

தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு 6,000 வகுப்பறைகள்

 தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தபடி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தது. 


அதன் பேரில் ஊரக வளர்ச்சித்துறையின்  ஆணையர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார்.


அதில், இடிக்கப்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பறை கூட இல்லாத 415 பள்ளிகளில் 985 வகுப்பறைகள் கட்ட ரூ.138 கோடி, பள்ளிக் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்ட 558 இடங்களில் 1155 வகுப்பறைகள் கட்ட ரூ.162 கோடி, 8 வகுப்பறைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் இருக்கும் 67 பள்ளிகளில் 638 வகுப்பறைகள் கட்ட ரூ.89 கோடியே 50 லட்சம், பள்ளிகளில் 2 முதல் 7 கூடுதல் வகுப்பறைகள் என 609 பள்ளிகளில் 2875 வகுப்பறைகள் ரூ.402 கோடியே 50 லட்சம் செலவிலும், இதர செலவுகளுக்காக ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.800 கோடிக்கு செயல்திட்டம் வகுத்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தார். 


மேற்கண்ட ஆணையரின் திட்டத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு அதை ஏற்றுக் கொண்டு ரூ. 800 கோடியில் 6 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட அனுமதி அளித்து உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் முதன்மைச் செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.Post Top Ad