என்னென்ன காரணங்களால் உங்கள் காரின் இன்ஜின் வழக்கத்திற்கு மாறாக அதிக எரிபொருளை நுகரும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார் வாங்கும் ஒவ்வொருவரும் அதிகம் கவனிக்கும் விஷயம் மைலேஜ்தான். எரிபொருள் விலை மிகவும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் சில சமயங்களில் உங்கள் காரின் இன்ஜின் வழக்கத்திற்கு மாறாக அதிக எரிபொருளை குடிக்கலாம். இதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இன்ஜின் பிரச்னைகள்
குறைபாடுகள் உடைய இன்ஜினால் சரியாக வேலை செய்ய முடியாது. அந்த இன்ஜின் அதிக எரிபொருளை நுகரும். எனவே உங்கள் கார் இன்ஜினில் பிரச்னைகள் இருந்தால், அது அதிக எரிபொருளை குடிக்கும். சில சமயங்களில் இன்ஜினில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் மற்ற முக்கியமான பாகங்களில் பிரச்னைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உதாரணத்திற்கு பெட்ரோல் இன்ஜின்களில் ஸ்பார்க் ப்ளக் அல்லது O2 சென்சார்களில் பழுது இருந்தாலோ, டீசல் இன்ஜின்களில் ஃப்யூயல் இன்ஜெக்டர்களில் அழுக்கு படிந்திருந்தலோ அதிக எரிபொருள் நுகர்வுக்கு வழிவகுத்து விடும். இதன் விளைவாக உங்கள் காரின் மைலேஜ் குறையலாம். எனவே உங்கள் கார் வழக்கத்திற்கு மாறாக அதிக எரிபொருளை குடித்தால், இந்த பிரச்னைகளை சரி பாருங்கள்.
தவறான இன்ஜின் ஆயில்
உங்கள் கார் அதிக எரிபொருளை குடிப்பதற்கு தவறான இன்ஜின் ஆயிலும் ஒரு காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்ஜின் சரியாக வேலை செய்வதற்கு இன்ஜின் ஆயில் மிகவும் இன்றியமையாதது. இன்ஜின் ஆயிலை பொறுத்தவரை பல்வேறு கிரேடுகள் உள்ளன. எனவே உங்கள் காருக்கான இன்ஜின் ஆயிலை தேர்வு செய்யும்போது கவனமாக இருப்பது அவசியம்.
தேவையில்லாத ஐட்லிங்
பயணத்தை தொடங்குவதற்கு முன்பு இன்றைய நவீன கார்களை பெரும்பாலும் வார்ம் அப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்ஜினை ஆன் செய்த உடனே சென்று கொண்டே இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் காரை வார்ம் அப் செய்து கொண்டிருந்தால், உங்கள் கார் அதிக எரிபொருளை குடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் உங்கள் பயணத்திற்கு இடையே நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டியது இருந்தாலும் இன்ஜினை ஆஃப் செய்து விடலாம். இதன் மூலம் நீங்கள் எரிபொருளை சேமிக்க முடியும். உதாரணத்திற்கு, டிராபிக் சிக்னல்களில் நீங்கள் ஒரு நிமிடம் அல்லது அதற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐட்லிங்கில் விடுவதற்கு பதிலாக இன்ஜினை ஆஃப் செய்து விடலாம்.
ஏனெனில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் இன்ஜினை ஐட்லிங்கில் வைத்திருப்பதுடன் ஒப்பிடும்போது காரை மீண்டும் ஸ்டார்ட் செய்வதற்கு குறைவான எரிபொருளே செலவாகும். எனவே தேவையில்லாமல் ஐட்லிங்கில் விடாதீர்கள். இது உங்கள் காரின் மைலேஜை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மோசமான எரிபொருள்
தரம் உங்கள் காரின் இன்ஜினிற்கு உள்ளே என்ன செல்கிறது? என்ற விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எரிபொருளின் தரம் மிகவும் மோசமாக இருந்தால், அது உங்கள் கார் இன்ஜினின் செயல்திறனை பாதிக்கும். அத்துடன் இன்ஜினின் ஆயுட்காலத்தையும் குறைத்து விடும். பெட்ரோல் பங்க்குகளில் நிறைய துணை பொருட்கள் (Additives) கிடைக்கின்றன என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
எரிபொருளுடன் கலக்கப்படும் இந்த துணை பொருட்கள் காரை இன்னும் சிறப்பாக செயல்பட வைப்பதற்கு உதவுகின்றன. ஆனால் எந்த துணை பொருளை தேர்வு செய்வதாக இருந்தாலும் கவனமாக இருங்கள். தவறான அல்லது போலியான துணை பொருள் உங்கள் காரில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஓவர்லோடு
நாம் கடைசியாக பார்க்க இருப்பது ஓவர்லோடு. உங்கள் காரில் அதிக எடையை ஏற்றினாலும், எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதற்கு காரணமாக அமையும். இதன் விளைவாக மைலேஜ் குறையலாம். காரின் பயனர் கையேட்டின் (User's Manual) மூலமாக எவ்வளவு எடையை ஏற்றி செல்ல முடியும்? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர்தான் எவ்வளவு எடையை ஏற்றி செல்லலாம் என்பதை பரிந்துரைக்கின்றன. பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றும் வரை காரின் செயல்திறனில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றினால், காரில் ஏராளமான பிரச்னைகள் ஏற்படும்.
வெறுமனே மைலேஜ் மட்டும்தான் பாதிக்கப்படும் என நினைத்து விட வேண்டாம். சஸ்பென்ஸன், டயர்கள், டிரான்ஸ்மிஷன் மற்றும் இன்ஜினிலும் இது பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே காரில் தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்து கொண்டிருந்தால், அவற்றை உடனடியாக அகற்றி விடுவது சிறந்ததாக இருக்கும்.
இந்தியாவில் சமீப காலமாக எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே எரிபொருளுக்கு என ஒவ்வொரு மாதமும் பெரிய தொகையை ஒதுக்கியாக வேண்டிய நெருக்கடிக்கு நடுத்தர வர்க்க குடும்பத்தினர் ஆளாகியுள்ளனர். எனவே இங்கே வழங்கப்பட்டுள்ள தகவல்கள், உங்கள் காரில் இருந்து நீங்கள் அதிகபட்ச மைலேஜை பெற உதவி செய்யும் என நம்புகிறோம்.
Read more at: https://tamil.drivespark.com/how-to/why-car-consuming-more-fuel-than-usual-5-important-reasons/articlecontent-pf234552-025827.html