ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச விருதுகள்: ஆசிரியர்கள், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 5, 2021

ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச விருதுகள்: ஆசிரியர்கள், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 


சுமார் ரூ.8 கோடி மதிப்பில் சர்வதேச ஆசிரியர், மாணவர் விருதுகளுக்கான அறிவிப்பை வர்க்கி அறக்கட்டளை  வெளியிட்டுள்ளது.





ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி குரூப்' நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சன்னி வர்க்கி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2010-ம் ஆண்டில் சன்னி வர்க்கி, லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.



கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையும், கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.



இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் மற்றும் சர்வதேச மாணவர் விருதுகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் விருதுக்கு 10 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.4 கோடி) பரிசுத் தொகையும், மாணவர் விருதுக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36.5 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.


16 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள்  யார் வேண்டுமானாலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பகுதி நேரமாகப் படிப்பவர்களும், ஆன்லைன் வழியாகக் கற்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.



சர்வதேச மாணவர் பரிசுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களின் கல்விச் சாதனை, சக மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள், இலக்கை அடைய அவர்கள் முரண்பாடுகளை எவ்வாறு சமாளிக்கின்றனர், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஞ்சித் சிங் திசாலே சர்வதேச ஆசிரியர் விருது


கற்பித்தல் நடைமுறைகள், உள்ளூரில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் விதம், கற்றல் விளைவுகளை அடைவது, வகுப்பறைக்கு அப்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது, குழந்தைகளை உலகளாவிய குடிமக்களாக மாற்றுவது, கற்பித்தல் முறைமைகளைப் படைப்பாற்றலுடன் மேம்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.


2020-ம் ஆண்டில் இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலேவுக்கு (32), பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதற்காக ரூ.7.4 கோடி பரிசுத் தொகையுடன் சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad