பள்ளிக்கல்வி துறைக்கு திடீர் சிக்கல் - Asiriyar.Net

Friday, March 1, 2024

பள்ளிக்கல்வி துறைக்கு திடீர் சிக்கல்

 



பள்ளிகள் வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.1,045 கோடி நிதியுதவியை மத்திய அரசு திடீரென நிறுத்தியதால் தமிழகத்துக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின்விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.


அதன்படி நடப்பு நிதியாண்டில் (2023-24) ரூ.2,090 கோடி நிதி வேண்டுமென மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்தது. அதில், இதுவரை ரூ.1,045 கோடி நிதி கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.1,045 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நிதியை வழங்கமுடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டதால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘பிஎம் பள்ளி எனும் திட்டத்தை மத்திய அரசு 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் என பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறும்.


தேசியக் கல்விக் கொள்கை: இதில் அனைத்து மாநிலங்களும் இணைய வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. அதையேற்று இதுவரை 29 மாநிலங்கள் சேர்ந்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, கேரளா உட்பட சில மாநிலங்கள் பிஎம் திட்டத்தில் இணையவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் வருவதால் தமிழகம் அதை ஏற்கவில்லை.


இந்நிலையில், பிஎம்ஸ்ரீ பள்ளிதிட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனால் இந்தாண்டு ரூ.1,045 கோடி நிலுவை நிதியானது நமக்கு கிடைக்காது. மேலும், தமிழக அரசுக் கும் கூடுதல் நிதி சிக்கல் ஏற்பட் டுள்ளது’’ என்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad