அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை - ரூ.36 கோடி மோசடி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 27, 2024

அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை - ரூ.36 கோடி மோசடி!

 




தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்தவர் பாலகுமரேசன். இவர் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த தொண்டு நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை துவங்கியுள்ளார். 


பின்னர் இந்த தொண்டு நிறுவனம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியர் பணியிடங்கள் தேவை என்று விளம்பரம் செய்து அதன் மூலம் ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தி பயிற்சி அளித்துள்ளார். அதன்மூலம் சிலரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு சேர்த்துள்ளார்.


தொடர்ந்து, இந்தப் பணிக்காக வந்த பட்டதாரி ஆசிரியர்களிடம், “அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் உங்களுக்கு தேர்வு எழுதாமல் கிடைக்கிறது. நீங்கள் 58 வயது வரை அந்தப் பள்ளியில் வேலை பார்க்கலாம்” என்று கூறி ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். 


இந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை, இன்சூரன்ஸில் டெபாசிட் செய்துவிட்டு, ‘நீங்கள் வேலையிலிருந்து விடுபடும்போது முதிர்வு தொகை வழங்கப்படும். மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்’ எனக் கூறி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு தமிழகம் முழுவதும் 1351 பட்டதாரி ஆசிரியர்களிடம் தலா ஐந்து லட்சம் ரூபாய் என சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.





இந்நிலையில், கொரோனா உள்ளிட்ட காலங்களில் ஆசிரியர்களை மாவட்ட கல்வித்துறை மூலம் பணி நியமனம் செய்துள்ளார். சுமார் 4 மாதம் முதல் ஓராண்டு வரை அங்கெல்லாம் அந்த ஆசிரியர்கள் வேலை பார்த்துள்ளனர். இதன் பின்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் ஏமாற்றியுள்ளார். 


இதைத் தொடர்ந்து தாங்கள் பாலகுமரேசனால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.


இதைத் தொடர்ந்து பாலகுமரேசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை துணையுடன் பட்டதாரி ஆசிரியர்களிடம் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த பாலகுமாரேசன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த மோசடியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Post Top Ad