திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியை திலகவதி, முதுகலை ஆசிரியர் கர்ணன் ஆகியோர் இரு தரப்பாக செயல்பட்டனர். ஆசிரியர்களும் இவர்களின் ஆதரவாளர்களாக பிரிந்திருந்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் திலகவதி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கொடுமை தாங்க முடியாமல் பல மாணவிகள் டி.சி வாங்கி சென்றதாகக் கூறி அரசுப் பள்ளி மாணவிகள் சிலர் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், "மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் நாங்கள். இங்கு சமீபத்தில் புதிதாக திலகவதி என்ற ஒரு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். நாங்கள் யாரேனும் தாமதமாக வந்தால் தலைமையாசிரியர் திலகவதி வெளியில் நிற்க வைத்து விடுகிறார். மாணவிகள் மாதவிடாய் பிரச்சனையில் இருக்கும் போதுகூட, வெயிலில் முட்டி போடச் சொல்லிக் கஷ்டப்படுத்துகிறார்.
கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்று புகார் சொன்னால் ‘ஒரு மணி நேரம் மட்டுமே ஒருநாளில் தண்ணீர் வரும்’ என்கிறார். பெரிய அதிகாரிகள் வந்தால் மட்டும்தான் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். நாங்கள் புகார் தெரிவித்தால் பெற்றோர்கள் கூட்டம் போட்டு எங்களைப் பற்றி தப்புத்தப்பாக சொல்வதால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது" என வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் அவர்கள், தங்கள் பிள்ளைகளை கழிவறை செல்ல அனுமதிக்காததால், பிள்ளைகள் தண்ணீர் அருந்துவதையே தவிர்க்கின்றனர் என்பதுபோன்ற கடும்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியை திலகவதி, முதுகலை ஆசிரியர் கர்ணன் ஆகியோர் இரு தரப்பாக செயல்பட்டனர். ஆசிரியர்களும் இவர்களின் ஆதரவாளர்களாக பிரிந்திருந்தனர். இந்நிலையில் இடைத்தேர்வு விடைத்தாளை ஆண் ஆசிரியர்களின் ஓய்வறையில் மாணவிகளை திருத்த வைத்ததாக கர்ணன் மீது தலைமையாசிரியை தரப்பு புகார் கூறியது.
இதன் எதிரொலியாக சி.இ.ஓ., கார்த்திகா விசாரணை நடத்தி இணை இயக்குநருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து திலகவதியை கள்ளிக்குடி அரசு மேல்நிலை பள்ளிக்கும், கர்ணனை கொட்டாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து மேல்நிலை கல்வி இணை இயக்குநர் கோபிதாஸ் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment