பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.
தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment